சுற்றுலாப் பயணிகளை கவர நுவரெலியா சீதை அம்மன் கோயிலுக்கு இலங்கை அரசு சிறப்பு தபால் தலை வெளியீடு

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக இலங்கையில் நுவரெலியாவில் உள்ள பிரசித்தி பெற்ற சீதை அம்மன் கோயிலுக்கு அந்நாட்டு அரசு சிறப்பு தபால் தலை மற்றும் அஞ்சல் அட்டையை வெளியிடப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் சென்றபோது, சீதையை கவர்ந்த வந்த ராவணன் மன்னன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சிறைபிடித்து வைத்தார். சீதை இருந்த அசோக வனம் என்கிற தற்போது இலங்கையில் சீதா எலிய என அழைக்கப்படுகிறது. இலங்கையின் மலையகத்தில் உள்ள நுவரெலியா மாவட்டம் நுவரெலியா நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் "சீதா எலிய" அமைந்துள்ளது. இன்றைய சீதா எலிய பகுதி காடு, மலை சூழ இயற்கை எழில் ததும்பக் கூடிய இடமாக, உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாகவும் உள்ளது. இங்கு சீதையை மூலவராக கொண்ட பிரசித்தி பெற்ற சீதை அம்மன் கோயில் அமைந்துள்ளது.

நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் கோயிலுக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலை, அஞ்சல் அட்டையுடன் தூதுவர் கோபால் பாக்லே, பிரதமர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்

இந்த கோயிலுக்கு அருகே உள்ள ஓடையில் சீதை நீராடினார் என்றும், அங்கு உள்ள பாறைகளில் உள்ள காலடி தடங்கள் அனுமனின் கால் தடங்கள் என பக்தர்களால் நம்பப்படுகிறது. சீதை அம்மன் ஆலயத்தில் உள்ள மரங்களில் பக்தர்கள் தங்களின் காணிக்கையை வைத்து வேண்டினால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சீதை அம்மன் ஆலயத்தில் புனித நீராடல் தீர்த்தம் திறப்பு விழா மற்றும் தியான மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டலும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சீதை அம்மன் ஆலயத்தின் ஆலய அறங்காவலரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரட்ணாயக்க, யதாமினி குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் கோயில், அதன் அருகே ஓடை மற்றும் அனுமனின் காலடி தடம்.

மேலும், இந்த விழாவில் இலங்கை அரசின் சார்பாக நுவரெலியா சீதை அம்மன் கோயிலுக்கான தபால் தலை மற்றும் சிறப்பு அஞ்சல் அட்டையை பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே பெற்றுக் கொண்டார். இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியா மற்றும் ஏனைய இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஈர்ப்பதற்கும் இந்த தபால் தலை உறுதுணையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE