சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

By செய்திப்பிரிவு

உதகை: சுற்றுலா பயணிகள் உதகையை முற்றுகையிட்டதால், நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

கடந்த 1-ம் தேதி முதல் கோடை சீசன் தொடங்கிவிட்டநிலையில், தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துவிட்டதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம்,தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் சொந்த வாகனங்களில் வந்தனர். கமர்சியல் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, பேருந்து நிலையம்,சேரிங்கிராஸ் மற்றும் உதகை - குன்னூர் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனால், ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய சுற்றுலா தலங்களுக்கு உரிய நேரத்தில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. நகரில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், சுற்றி, சுற்றி வந்ததாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டனர்.

கூடலூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் பேருந்து நிலையம் பகுதிக்கு மாற்றிவிட்டதால், அந்த பகுதியில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, கூடலூர் அருகே நாடுகாணியில் இருந்து நிலம்பூர் செல்லும் சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகன நெரிசலில் ஏற்பட்டுள்ளது. இதற்கு, நாடுகாணியில் உள்ள வரி வசூல் செய்யும் சோதனைச்சாவடியில் ஆட்கள் பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக கூடலூர், குன்னூர் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மலப்புரம், கோழிக்கோடு, மைசூரு மற்றும் உதகை செல்லும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக செல்கின்றன.

இதற்கிடையே, உதகை நகரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் நேற்று நேரடியாக ஈடுபட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE