கொடைக்கானலுக்கு ஏமாற்றம் தந்த சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சிக்கு, கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில் எதிர்பார்த்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

குறிப்பாக, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண உருப்படியான அறிவிப்பு எதுவும் வெளியிடாததால் சுற்றுலாப் பயணிகள், கொடைக்கானல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனில் ஆயிரக்கணக்கான பயணிகள் கொடைக்கானல் வந்து செல்கின்றனர். ஆனால், புதுமையான பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. அதுபோல, போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் நிலையும் தொடர்கிறது.

பல்லடுக்கு வாகன நிறுத்தம்: கடந்த ஆட்சிக்காலம் முதல் கோடை விழாவுக்கு வரும் அமைச்சர்கள் கொடைக்கானலில் நெரிசலுக்கு தீர்வுகாண ‘மல்டிலெவல் கார் பார்க்கிங்’ (பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம்) அமைக்கப்படும் என ஒவ்வொரு ஆண்டும் உறுதி அளித்துச் செல்வர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வாகன நிறுத்துமிடம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதற்கான அறிவிப்பு, சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த வாகன நிறுத்தம் அமைத்தால், நகர்புறம், ஏரிச்சாலை, பிரையன்ட் பூங்கா பகுதி, கோக்கர்ஸ் வாக் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும். ஏரிச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கலாம்.

ஏரிச்சாலையை சுற்றி சிறுவர்கள் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி என போக்குவரத்து இடையூறு இன்றி செல்லலாம். இதற்கான தீர்வு இப்போதைக்கு இல்லை என்றாகிவிட்டது.

ஸ்கை வாக்: வனத்துறை சார்பில், டால்பின் நோஸ் பகுதியில் ‘ஸ்கை வாக்’ அமைக்கும் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. (உயரமான மலைப் பகுதியில் கண்ணாடி பாலம் அமைத்து அதன் மேல் சுற்றுலாப் பயணிகள் நடந்துசெல்வது).

ஆனால், சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் அந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு சாகஸ சுற்றுலா என மன்னவனூர் சூழல் பூங்காவில் ஜீப் லைன் அமைக்கப்பட்டது. இதேபோல் வனத்துறை மூலம் பைன் பாரஸ்ட்டில் மரங்களுக்கிடையே மரப் பாலம் அமைக்கும் ‘ட்ரீ வாக்’ திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கு பெருமளவு நிதி தேவைப்படும் என்றாலும், நிதியே தேவையில்லாத மலைகிராம சுற்றுலா குறித்த அறிவிப்பும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில் இல்லாதது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

கொடைக்கானலுக்கான அறிவிப்புகள்: கொடைக்கானல் ஏரியில் மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்படும் என, மானியக் கோரிக்கையின் 21- வது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அறிவிப்புக்கள் மட்டுமே உள்ளன. கடந்த ஆட்சியிலும் கொடைக்கானல் சுற்றுலாத் தலம் புறக்கணிக்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. இருந்தும் (பழநி தொகுதி இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.,) புறக்கணிப்பு தொடர்வதாக கொடைக்கானல் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE