கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல சிறப்பு பேருந்து

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், குறைந்த கட்டணத்தில் 12 சுற்றுலா இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொடைக்கானலுக்கு கோடை சீசனையொட்டி வெளி மாவட்டம், வெளி மாநிலங் களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சீசன் காலங்களில் கொடைக்கானலுக்கும், கொடைக்கானலில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் 20 கி.மீ. சுற்றுச்சாலையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்ல அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, தற்போது மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, பழநி மற்றும் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து மே மாதம் வரை முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதே போல் கொடைக்கானலில் இயற்கை எழில் மிகுந்த அப்பர் லேக் வியூ, மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கால்ப் மைதானம், பாம்பார் ஆறு, 500 ஆண்டு மரம், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா மற்றும் கொடைக்கானல் ஏரி ஆகிய 12 இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு 12 சுற்றுலா இடங்களையும் காண்பித்து விட்டு மீண்டும் ஏரிப் பகுதியில் பயணிகள் இறக்கி விடப்படுவர். இதற்கு 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.75, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.150 கட்டணம். மேலும் விவரங்களுக்கு 9976122888-ல் தொடர்பு கொள்ளலாம். மே 31 வரை இந்த சேவை தொடரும் என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE