கோடை சீசன்: மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பஸ்கள் இயக்கம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கோடை சீசனை தொடர்ந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலயத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பஸ் இயக்கப்படுவதால் தென் மாவட்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்றவை முக்கியமான கோடை வாஸ்தலங்களாக திகழ்கின்றன. மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நகரங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிகளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் மதுரையில் இருந்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கொடைக்கானல் சென்று வருகின்றனர்.

மதுரையும் முக்கிய ஆன்மீக சுற்றுலா தலமாக இருப்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பேருந்துகளில் கொடைக்கானல் செல்கிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் கொடைக்கானல் சீசனை கொண்டாட விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானல் செல்லும் அரசு பேருந்துகளில் கூட்டம் நிரம்பி செல்கிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்திற்கு மாறாக சுட்டெரிப்பதால் பஸ்களில் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். அவர்களுக்கு வசதியாக மதுரை அரசு போக்குவரத்து கழகம், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு ஏசி பேருந்துகளை கடந்த சில நாட்கள் முன்பிருந்து இயக்கி வருகிறது. இந்த ஏசி பேருந்துகளில், கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குதூகலமாக கொடைக்கானல் செல்கின்றனர். மதுரை ஆரப்பாளையம் முதல் கொடைக்கானல் செல்வதற்கு இந்த ஏசி பேருந்துகளில் செல்வதற்கு ரூ.150 கட்டணம் வசூல் செய்கிறார்கள். அதிகாலை 4.45 ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து காலை 8.30 மணியளவில் கொடைக்கானல் சென்றடைகிறது.

மீண்டும் 9.30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்படும் இந்த பேருந்து மதியம் ஒன்றரை (1.1/2) மணிக்கு ஆரப்பாளையம் வந்துவிடுகிறது. மீண்டும் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5.40 கொடைக்கானல் சென்றடைகிறது. மாலை 6.10 மணிக்கு கொடைக்கானலில் புறப்படும் இந்த பேருந்து இரவு 9.45 மணிக்கு ஆரப்பாளையம் வந்தடைகிறது. தற்போது இந்த பேருந்துகளில் கூடுதல் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளதால் வரும் வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் மற்றொரு பேருந்து இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேருந்து இடை நில்லா பேருந்து என்பதால் பயணிகள் மதுரையில் இருந்து நேரடியாக கொடைக்கானலில் செல்கிறது. ஆரம்பத்தில் நிலக் கோட்டை, வத்தலகுண்டு பேருந்து நிறுத்தங்களில் நின்ற நிலையில் அதில் போதிய பயணிகள் ஏறாததால் தற்போது நேரடியாக கொடைக்கானல் சென்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE