புதுச்சேரி - நோணாங்குப்பம் படகு குழாமில் குவியும் சுற்றுலா பயணிகள்: அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு அதிகளவு வருவாய் தரும் நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் வருவது அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் குடிநீர் வசதியோ, கோடை வெப்பத்தில் இருந்து காக்க போதிய நிழல் தடுப்பு வசதிகளோ இல்லாமல் இங்கு படகு சவாரிக்கு வரும் குழந்தைகள், பெற்றோர், முதியோர் தவிக்கின்றனர்.

புதுச்சேரி - கடலூர் சாலையில், நோணாங்குப்பம் ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் இயற்கையான மணல் திட்டு உள்ளது. இந்த பகுதியில் நோணாங் குப்பம் படகு குழாம் கடந்த 1990-ம்ஆண்டு அமைக்கப்பட்டது. புதுச்சேரி நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் இயற்கை எழிலுற இந்த படகு குழாம் அமைந்துள்ளது.

புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் இந்த படகு குழாம் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ‘பாரடைஸ் பீச்’ என அழைக்கப்பட்டுள்ள இந்த படகு துறையில் ஸ்பீட் போட், மோட்டார் போட், பெடல் போட், ஃபெராரி ரைட் என பல வகையான படகுகள் உள்ளன. இந்த படகு பயணம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.

சாதாரண நாட்களில் 300 லிருந்து 500 பேர் வருவார்கள். வார விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வருகின்றனர். கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை இருந்ததால், நான்காயிரம் பேர் வரை வந்திருந்தனர்.

இவர்கள் மூலம் ரூ. 20 லட்சம் வரை கட்டணம் வசூல் ஆகியுள்ளது. இந்த வாரமும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில், நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்தனர். சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு நல்ல வருவாய் ஈட்டித் தரும் இப்படகு குழாமில் அடிப்படை வசதிகள்தான் இல்லை.

இதுபற்றி குழந்தைகளுடன் வந்து தவித்த சென்னை பயணிகள் நீரஜ், ராஜேஷ், கதிர் ஆகியோர் கூறுகையில், "கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தைகளுடன் வருகிறோம். போதிய குடிநீர் வசதியும் இல்லை. படகு சவாரிக்கு நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் 4 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நிழல் வசதி ஏற்படுத்தி தருவது அவசியம். கூடுதல் கவனம் எடுத்து, சுற்றுலா பயணிகள் தங்கும் வசதியை கூட இப்பகுதியில் உருவாக்கலாம். பெடல் போட், விரைவு படகு ஆகியவை சரிவர இயங்கவில்லை; அதை சரி செய்யலாம்" என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரிக்கு வருவோர், கூகுளில் தேடப்படும் முக்கிய இடமாக சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது. அது லாபத்திலும் இயங்குகிறது. ஆனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதிலும் மட்டும் ஏன் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு தயக்கம் என்ற கேள்வி எழுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE