ஆன்லைனில் தங்கும் விடுதி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் தொடரும் பணமோசடி: உதகை சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

உதகை: ஆன்லைனில் தங்கும் விடுதி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் தொடர்ந்து பணமோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனின்போது, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களை மகிழ்விப்பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலமாக உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் அறை முன்பதிவு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைனில் பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் பணம் மோசடி செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து உதகை சைபர் கிரைம் ஆய்வாளர் பிலிப் கூறியதாவது: உதகையில் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் அறை முன்பதிவு செய்வார்கள் என்பதை தெரிந்துகொண்ட மோசடி பேர்வழிகள், இங்கு ஏற்கெனவே உள்ள ஓட்டல்கள் அல்லது ஓட்டல்களே இல்லாமல் ஏதாவது ஒரு பெயரில் ஓட்டல்கள் இருப்பதுபோல ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வார்கள்.

மேலும், சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உதகையில் அறை உள்ளதா என்று கூகுளில் யாராவது தேடினால், இவர்கள் போலியாக உருவாக்கிய முகவரி, வங்கி கணக்கு எண் விவரங்கள் முதலில் வரும்படி செய்துவிடுகின்றனர்.

இதைத்தொடர்ந்து அறை முன்பதிவு செய்து வங்கி கணக்கு எண் மூலமாக சுற்றுலா பயணிகள் பணம் செலுத்துகின்றனர். அதன்பின், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லும்போது மோசடி சம்பவம் நடந்திருப்பது தெரிய வருகிறது. இதேபோல் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். புகார் அளித்தால்தான் முழு உண்மை நிலவரம் தெரியவரும். இதுவரை சுமார் 10 ஓட்டல் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் ஏமாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து வலைதள நிறுவனத்துக்கு புகார் அளித்து, அந்த போலி இணையதள முகவரியை நீக்கம் செய்ய அறிவுறுத்தி கடிதம் அளித்துள்ளோம். அதேபோல, இணையதளம் மூலமாக பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் அந்த ஓட்டலை தரைவழி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தலாம். இல்லாவிட்டால் நம்பிக்கைக்குரிய செயலிகள் மூலமாக அறை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE