பள்ளிவிளங்கால் அணைக்கட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: ஆழியாறு அருகே பள்ளிவிளங்கால் அணைக்கட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து, கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி - வால்பாறை சாலை ஆழியாறு அணை அருகே பள்ளிவிளங்கால் அணைக்கட்டு உள்ளது. ஆழியாறு ஆற்றில் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டில், ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். இதனால் ரம்மியமாக காணப்படும். இந்த அணைக்கட்டில் பல்வேறு இடங்களில் நீர்ச் சுழல்களும், புதைமணல் பகுதிகளும் இருப்பதால் ஆபத்து நிறைந்து காணப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள ஆழியாறு அணைக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள், அதன் அருகில் உள்ள பள்ளிவிளங்கால் அணைக்கட்டுக்கு சென்று குளிக்கின்றனர். அணைக்கட்டில் சுழல் இருப்பது தெரியாமலும், ஆழமான பகுதிக்கு சென்று புதைமணலில் சிக்கியும் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கோடை தொடங்கியதும் கவியருவி வறண்டு விடுவதால் சுற்றுலா பயணிகள் நீர் நிறைந்துள்ள பள்ளிவிளங்கால் அணைக்கட்டு வருகின்றனர்.

புதைமணல், நீர்ச் சுழல்கள் நிறைந்த இப்பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து போலீஸார் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். ஆனாலும், தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிவிளங்கால் அணைக்கட்டு பகுதியை சுற்றுலா பயணிகள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "வெளியூரில் இருந்து ஆற்றுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளில், பெரும்பாலானோர் மது போதையிலும், குளிக்கும் ஆசையிலும், நீச்சல் பழகும் ஆர்வத்திலும் ஆற்றில் இறங்கி உயிரிழக்கின்றனர். இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தாலும், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை. தற்போது பேரூராட்சி நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளது.

தடுப்பணை பகுதிக்குள் நுழைவோரை தடுத்து நிறுத்த, இப்பகுதியில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அணைக்கட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்"’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE