உதகை பூங்காவில் கோடை சீசனுக்கான ஆயத்த பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

உதகை: சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரியில் வரும் மே மாதம் 125-வது மலர்க் கண்காட்சி நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியுள்ளன.

கோடை சீசனுக்காக டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நாற்று நடவுப் பணி தொடங்கும். 3 மாதம் முதல் 6 மாதம் வரை வளரும் செடிகள், அதன் பூக்கும் தன்மையைக்கொண்டு பல கட்டமாக நடவு செய்யப்படும். இதனால் மே மாதம் கோடை சீசனின்போது அனைத்து மலர்ச் செடிகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

கடந்த 2 மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால், வனங்கள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து போயுள்ளன. உதகை அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானமும் காய்ந்துபோய் உள்ளது. மேலும், சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இதனை சீரமைக்க தற்போது புல்தரைகளில் உரம் கலந்த மண் கொட்டப்பட்டு வருகிறது.

புல்தரையில் உள்ள களைச்செடிகளை ஊசிகள் மூலம் அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த களைச்செடிகளை கைகளால் அகற்றினால்தான் புற்கள் நன்றாக வளர்ந்து, புல்தரை சிறப்பாக அமையும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். உதகை தாவரவியல் பூங்காவில் ஆயத்த பணிகள் முடிந்து, நாற்று நடவு செய்ய பாத்திகள் மற்றும் தொட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE