ஏற்காடு, ஆனைவாரி முட்டலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விடுமுறை நாட்களில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதில் மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். ஞாயிறு விடுமுறை நாளான நேற்று, சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்களான ஏற்காடு, ஆனைவாரி முட்டல், மேட்டூர், குரும்பப்பட்டி பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்களின் வருகை அதிகமாக இருந்தது.

குறிப்பாக, ஏற்காட்டுக்கு, சேலம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். இதனால், ஏற்காடு ஏரி படகுத்துறை, அண்ணா பூங்கா, ரோஜாத்தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும், பகோடா பாயின்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட காட்சி முனைப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளை கூட்டம் கூட்டமாக காண முடிந்தது.

கரடியூர் வியூ பாயின்ட் பகுதிக்கும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனிடையே, ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் சுற்றுலாத் தலத்திலும் சுற்றுலாப் பயணிகள் நேற்று அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். அங்குள்ள முட்டல் ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

அருவியில் கொட்டும் நீரில் ஆனந்த குளியலிட்டு உற்சாகமடைந்தனர். குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் பார்வையாளர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதேபோல, மேட்டூரிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பதால், அணையில் உள்ள காட்சி கோபுரத்தில் ஏறி, அணையின் பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசித்தனர்.

மேலும், அணையை ஒட்டியுள்ள அணைக்கட்டு முனீஸ்வரர் கோயில் அருகே காவிரியில் குளித்தும், சுவாமியை வழிபட்டும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். மேட்டூர் அணை பூங்காவிலும், பார்வையாளர் வருகை அதிகமாக இருந்ததால் பூங்கா வளாகம் திருவிழாக் கோலத்தில் காட்சியளித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE