உதகை ஏரியில் படகு சவாரியின்போது அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

By செய்திப்பிரிவு

உதகை: உதகை ஏரியில் ஆபத்தை உணராமல் நின்றுகொண்டும், விளையாடிக்கொண்டும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர்.

உதகையில் கடந்த 1823-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ஜான் சலீவனால் செயற்கையாக ஏரி உருவாக்கப்பட்டது. பின் 1973-ம்ஆண்டு இந்த ஏரி சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி தொடங்கப்பட்டு, தற்போது மோட்டார் படகுகள், துடுப்புப் படகுகள், மிதி படகுகள் ஆகியவை இயக்கப்படுகின்றன.

சாதாரண நாட்களில்கூட உதகை ஏரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு படகு சவாரி செல்வது வழக்கம். தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சில இளைஞர்கள் படகு சவாரியின்போது, ஆபத்தை உணராமல் படகில் நின்றுகொண்டும், விளையாடிக்கொண்டும் சவாரி செய்கின்றனர்.

திடீரென நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தால், சுற்றுலா பயணிகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இது குறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘லைப் ஜாக்கெட்’ அணிந்த பின்னரே அவர்கள் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சவாரியின் போது அத்துமீறும் சுற்றுலா பயணிகளை ‘லைப் சேவர்கள்’ குழுவினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

அத்துமீறுபவர்களை எச்சரிக்கை செய்து, இக்குழுவினர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றனர். கண்காணிப்பை மீறி படகில் நிற்பது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE