ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் விருப்பாச்சி தலையூத்து அருவி சுற்றுலாத் தலமாகுமா?

By ஆ.நல்லசிவன்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலாத் தலமாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றி மலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. அணையில் இருந்து வெளியேறும் நீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாகக் கொட்டுகிறது.

பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது. விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ. தொலைவு பயணித்தால் மலையடிவாரத்தில் பெருமாள் கோயிலை அடையலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால், நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோயிலின் முன்பகுதியில் அருவியைக் காணலாம்.

இந்த அருவி வனத்தில் மூலிகைச் செடிகளின் மீது பட்டு வருவதால் குளிப்போருக்கு புத்துணர்ச்சி தருகிறது. ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது சிறப்பு. மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும் தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்கின்றனர். இந்த நீரை காசி தீர்த்தத்துக்கு ஈடாக கருதுவதால் ‘நல்காசி’ என்றும் அழைக்கின்றனர்.

பின் மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ., தொலைவுக்கு நங்காஞ்சி யாறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதே சமயம் அருவி பகுதியில் நீர் சுழல், சில இடத்தில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு காரணமாக யாரையும் குளிக்க அனுமதிப்பது இல்லை.

இருப்பினும் உள்ளூர் வாசிகளும், அருவி பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்வோரும் அவ்வப்போது ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இயற்கை வளம் நிரம்பிய தலையூத்து அருவியை ஒருநாள் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளோம். அரசின் அனுமதி கிடைத்ததும் சுற்றுலாத்தலாமாக அறிவித்து அருவியில் பாதுகாப்பாக குளிப்பதற்கும், இங்கு வரும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE