உதகை தேனிலவு படகு இல்ல நடைபாதையை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு சீசன்காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், அவர்களின் வசதிக்காக மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் உதகை ஏரியின் மறுகரையோரத்தில் 2008-ம் ஆண்டு ரூ.83 லட்சம் செலவில் தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது.

மேலும், தேனிலவு படகு இல்லத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், பசுமை புல்வெளியுடன் கூடிய பூங்கா, சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகம் சார்பில், 2019-ம்ஆண்டு ரூ.45 லட்சம் மதிப்பில் தேனிலவு படகு இல்லம் சீரமைக்கப்பட்டது.

இந்த தேனிலவு படகு இல்லம் வழியாக படகில் சென்றுவிட்டு, திரும்பும்போது நடந்துவரும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளதுபோல அலங்கார நடைபாதை அமைக்கப்பட்டதால், அந்த வழியாக நடந்துவர புதுமண தம்பதிகள் ஆர்வம் காட்டுவர்.

ஆனால், தற்போது அந்த நடைபாதை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் புதுமண தம்பதிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, "தேனிலவு படகு இல்ல ஏரியின் கரையோரத்தில் உருவாக்கப்பட்ட அலங்கார நடைபாதையில் நடந்து சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கபல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், நடைபாதை முற்றிலும் உபயோகமற்று, சுற்றுலா பயணிகளுக்கு தெரியாமல் இருக்கிறது. மாலை நேரங்களில் இந்த நடை பாதை முழுவதிலும் எரியும் அலங்கார விளக்குகள் சேதமடைந்துள்ளன. எனவே, இதை உடனடியாக சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

சுற்றுலா துறை அதிகாரிகள் கூறும்போது, "சுற்றுலா பயணிகள் நடந்துவரும் நடைபாதையில் காட்டெருமைகள் நடமாடுகின்றன. அதனால், தற்காலிகமாக அந்த பாதை அடைக்கப்பட்டுள்ளது. தற்போது சாகச சுற்றுலாவுக்கான வேலைகள் தொடங்கியிருப்பதால், அதன் ஒரு பகுதியாக இந்த நடைபாதையையும் முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE