தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதல்: குமரியில் காலை 6 மணிக்கே படகு சவாரி தொடங்கப்படுமா?

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமானகன்னியாகுமரியில் சபரிமலை சீசன்தொடங்கிய கடந்த மாதம் 17-ம் தேதி முதல் கூட்டம் அலைமோதியது. இந்த மாத இறுதிக்குள் கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 5 லட்சம் பேரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கிறிஸ்துமஸ் விடுமுறையால் கடந்த ஒரு வாரமாக கன்னியாகுமரி, திற்பரப்பு, மார்த்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை என சுற்றுலா மையங்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்தனர்.

கிறிஸ்துமஸ் முடிந்த நிலையி்ல் நேற்றும் கன்னியாகுமரி மற்றும்மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் காணப்பட்டது. வருகிற புத்தாண்டு வரை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்பதால் சுற்றுலா திட்டங்களை வகுத்து அதிகமானோர் கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் விவேகானந்தர் மண்டபத்துக்கு 11,000 பேருக்கு மேல் படகில் சென்றுபார்வையிட்டுள்ளனர். அதற்கு முந்தைய தினம் 10,800 பேருக்கு மேல் படகு சவாரி செய்துள்ளனர். அதே நேரம் படகு சவாரிக்கான டிக்கெட் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கன்னியாகுமரி படகு துறையில்நேற்று கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் காலை 6 மணிக்கே வரிசையில் காத்து நின்றனர். 200 ரூபாய் சிறப்பு வரிசை கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்குவதற்காக படகு இல்லத்தில் இருந்து பகவதியம்மன் கோயில் வரைசுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர். ரூ.50 கட்டண வரிசை கன்னியாகுமரி வடக்கு ரதவீதியை தாண்டி போக்குவரத்து சாலை வரை நீண்டிருந்தது. 4 மணி நேரத்துக்கு மேல்காத்திருந்து ஏராளமானோர் டிக்கெட்எடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் கூட்டம் அதிகமுள்ளசீசன் நேரத்தில் 2 மணி நேரம் முன்னதாக காலை 6 மணிக்கே படகு சவாரியை தொடங்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது வழக்கமாக சபரிமலையில் மகரவிளக்கு காலத்தின் போது பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையால் 3 நாட்களுக்கு காலை 6 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கும். அதுபோல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களில் 2 மணி நேரம் முன்னதாக சுற்றுலா பயணிகளை விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால் 5 ஆயிரம் பேர் வரை கூடுதலாக படகு சவாரி செய்ய முடியும். அத்துடன் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வருவாயும் அதிகரிக்கும்’’ என்றனர்.

திற்பரப்பில் போக்குவரத்து பாதிப்பு: பண்டிகை விடுமுறை நாட்களில் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். நேற்று வழக்கத்தைவிட திற்பரப்பில் சுற்றுலாபயணிகளின் வாகனங்கள் அதிகம்வந்ததால் திருவட்டாறு, குலசேகரத்தில் இருந்தே கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பலமணி நேரம் சுற்றுலா பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். போக்குவரத்தை சீரமைக்க போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படாததால் வாகனங்கள்ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுவதை காண முடிந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE