தீபாவளி தொடர் விடுமுறையால் உற்சாகம்: ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

By செய்திப்பிரிவு

சேலம்: தீபாவளி தொடர் விடுமுறையில், பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்காடு, மேட்டூர் உள்பட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்.

தீபாவளியை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பின்னர் நேற்றைய விடுமுறையைக் கொண்டாடுவதற்கு, பலர் குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வந்தனர்.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். கடந்த வாரங்களில் தொடர் மழை பெய்த நிலையில், சில நாட்களாக மழையின்றி காணப்பட்ட ஏற்காட்டில், இதமான குளிர் நிலவுவது, சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால், ஏற்காட்டில் படகு குழாம், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில், பகோடா பாயின்ட் உள்பட முக்கிய சுற்றுலா இடங்கள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளை அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது.

இதனிடையே, தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறை பூங்காவிற்கும் சுற்றுலாப் பயணிகள் நேற்று அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். அணையில் 120 அடி உயரத்திற்கு நீர் தேங்கியிருப்பதுடன், 16 கண் மதகு வழியாக உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருவது, மேட்டூருக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்த்துள்ளது.

எனவே, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவின் எல்லையோர பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் மேட்டூர் வந்திருந்தனர். அவர்கள் அணையைப் பார்வையிட்டதுடன், அணையை ஒட்டி அமைந்துள்ள பொதுப்பணித்துறை பூங்காவுக்கும் சென்று குழந்தைகளுடன் விடுமுறையை உற்சாகமாக கொண்டாடினர்.

சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக, மேட்டூரில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்தது. அணை வளாகம் அருகே அமைந்துள்ள அணைக்கட்டு முனியப்பன் கோயிலிலும் நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்தது.

கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் நிலவிய இதமான சீதோஷ்ண நிலை சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE