கொடைக்கானலில் அமைகிறது ‘சாகச சுற்றுலா தலம்’ - மக்களைக் கவர சுற்றுலா துறை திட்டம்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல் மன்னவனூரில் சுற்றுலாத் துறை சார்பில் ‘சாகச சுற்றுலா தலம்’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன.

கோடை சீசன் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 5 முதல் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரவும் கொடைக்கானல் அருகே மன்னவனூரில் ‘சாகச சுற்றுலா தலம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த மலர் கண்காட்சியின்போது மன்னவனூரில் சாகச சுற்றுலாவுக்கான உபகரணங்கள் அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியிருந்தார்.

அதன்படி, இரும்புக் கயிற்றில் தொங்கியபடி செல்லுதல், மலையேற்றம், டிரக்கிங், பாராசூட் ஸ்கை டைவிங், வலைப் பின்னலில் ஏறுதல் உள்ளிட்ட சாகச விளையாட்டுகள், உணவகம், தங்கும் குடில்கள் போன்றவை ‘சாகச சுற்றுலா’ தலத்தில் இடம் பெற உள்ளன.

முதற்கட்டமாக, மன்னவனூர் பகுதியில் சாகச சுற்றுலா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என சுற்றுலாத் துறையினர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். ஒப்புதல் கிடைத்ததும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சாகச சுற்றுலா தலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என சுற்றுலாத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE