சிறுமலையில் அழிந்து வரும் பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா?

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே சிறுமலையில் அழிந்து வரும் பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலம் சிறுமலை. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தொலைவில் 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றால் சிறுமலையை அடையலாம். இது கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ளது.

ராமாயண காலத்தில் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிவரச் சென்றபோது, அதில் இருந்து விழுந்த சிறு துண்டு தான் சிறுமலை எனக் கூறப்படுகிறது. இங்கு பழையூர், புதூர் அகஸ்தியர்புரம், பொன்னுருக்கி, தாளக்கடை, நொண்டி பள்ளம், பசலிக்காடு, தென்மலை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

சிறுமலையில் குளுமைக்குப் பஞ்சம் இருக்காது. மூலிகைகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்ந்த காடுகளுடன் ரம்மியமாகக் காட்சியளிக்கும் சிறுமலை காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதனால் சிறுமலையை ஒரு நாள் சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் சுற்றுலாத் துறையிடம் உள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவர வனத் துறை சார்பில் தென்மலையில் ரூ.5 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ‘பல்லுயிர் பூங்கா’ அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர, அகஸ்தியர்புரத்தில் வெள்ளி மலை சிவன் கோயில், அகஸ்தியர் சிவசக்தி சித்தர் பீடம் உள்ளது.

‘டிரக்கிங்’ செல்வதற்கு வெள்ளிமலை ஏற்ற இடம். தமிழர்களின் தொன்மையான வரலாறை வெளிப்படுத்துவதில் அகழாய்வுகள், கல்வெட்டுகள் போல பாறை, குகை ஓவியங்களும் குறிப்பிடத்தக்கவை. சிறுமலை தென்மலை, மீன் குட்டி பாறை, கருப்பு கோயில் ஆகிய பகுதிகளில் வெள்ளை வண்ணத்தில் எண்ணற்ற ஓவியங்கள் காணப்படுகின்றன.

இவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்களின் வேட்டையாடுதல், நடனம், திருவிழா ஆகியவற்றை சித்தரிப்பதாக உள்ளது. இருந்தும் தொல்லியல் துறையினர் அதைக் கண்டும் காணாமல் இருப்பதால் முட்புதர்கள், செடி கொடிகளால் மூடப்பட்டுள்ளன. காலப்போக்கில் பாறை ஓவியங்கள் மறைந்தும் வருகின்றன.

இதை சுற்றுலாப் பயணிகள் சுலபமாக சென்று பார்க்க வசதியில்லை. ஓவியங்களை பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகளும் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிறுமலையை சேர்ந்த விவசாயி எஸ்.தியாகராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE