உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் ஒரு மாதம் மலர்க் கண்காட்சி

By செய்திப்பிரிவு

உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் பார்வைக்காக தாவரவியல் பூங்காவில் ஒரு மாதம் மலர்க் கண்காட்சி திறந்துவைக்கப்படும் என்று, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த ஆண்டு இரண்டாம் சீசனையொட்டி, தாவரவியல் பூங்காவில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே போன்ற இடங்களிலிருந்து இன்காமேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு சப்னேரியா உட்பட 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டு, சுமார் 4 லட்சம் வண்ண மலர்ச்செடிகள் பாத்திகளில் நடவு செய்யப்பட்டன.

மேலும், ஆந்தூரியம், கேலா லில்லி உட்பட 30 வகையான மலர்ச்செடிரகங்கள் அடங்கிய 15,000 மலர்த் தொட்டிகளை காட்சிமாடத்தில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் அடுக்கிவைத்தனர். மலர்த் தொட்டிகளைக் கொண்டு, பெரணி இல்லத்தின் இருபுறமும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டாவது சீசனை முன்னிட்டு மலர்க் கண்காட்சியை, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, "உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர்.

உதகையிலுள்ள உலக பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்காவில், 4 லட்சம் மலர்ச்செடிகள் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டன. அதில், பூ பூத்து சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக விளங்குகிறது.

மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், இரண்டாம் பருவத்துக்கான 70 வகை மலர்ச்செடிகள் அடங்கிய 10,000 மலர்த்தொட்டிகள், மலர்க் கண்காட்சி திடலில் அடுக்கிவைக்கப் பட்டுள்ளன.

நீலகிரியை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இயற்கை வேளாண்மையை நோக்கி என்ற வாசகம், 2,000 மலர்த் தொட்டிகளால் வடிவமைக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், பெரணி இல்லம் புல்வெளி மைதானத்தில் நெகிழிப்பையை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்தும் நோக்கமாக 5000 மலர்த் தொட்டிகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மலர்க் கண்காட்சி திடல், சுற்றுலா பயணிகளுக்காக ஒரு மாதம் திறந்துவைக்கப்படும்" என்றார். மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட ஊராட்சித் தலைவர் மு.பொன்தோஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE