குமரி படகு இல்லத்தில் மணலில் புதைந்த பொக்லைன் இயந்திரம்: நீர்மட்டம் உயர்ந்ததால் பரபரப்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி படகு இல்லத்தில் குவியும் மணல் திட்டுக்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டபோது கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் மணலை அள்ளும் பொக்லைன் இயந்திரம் மணலில் புதைந்தது. இச்சம்பவம் கன்னியாகுமரி படகு இல்லத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி கடல் நடுவே பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இவற்றை ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர். முதன்மையான பொழுதுபோக்கு அம்சமான இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு கடலில் உல்லாச பயணம் செய்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு அதிநவீன சொகுசுப் படகுகளும் இயக்கப்படுகின்றன. இந்த 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. படகுத் துறையில் இடநெருக்கடிக்கு இடையே 5 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின் போது படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன.

அத்துடன் கடல் நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும் போதும் படகுகள் தரை தட்டி நிற்கின்றன. இதனால் குவிந்திருக்கும் மணல் திட்டுகளை அடிக்கடி அகற்றி தூர்வாரப்படும். கடந்த சில நாட்களாக படகுத்துறையில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மணல் குவியல்களை பெரிய பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படகுத் துறையில் புதன்கிழமை மணல் அள்ளிக் கொண்டிருந்தபோது கடல்நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால், பொக்லைன் இயந்திரம் மணலில் புதைந்தது. இதைத் தொடர்ந்து கிரேன் மூலம் பொக்லைன் இயந்திரத்தை மீட்கும் பணி நடந்தது. இச்சம்பவம் கன்னியாகுமரி படகு இல்லத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE