உதகை காப்புக் காட்டில் நீலக் குறிஞ்சி - அத்துமீறி நுழைவோருக்கு அபராதம்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகை அருகே காப்புக் காட்டில் மலர்ந்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களை பார்வையிட யாராவது அத்துமீறி நுழைந்தால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலக்குறிஞ்சி மலர் செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. இந்தச் செடிகளின் உயரம், 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் முதல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் காணப்படுகிறது. அதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் தனித்துவமானது. இவை பற்றி இலக்கியங்களில் கூட கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உதகை அருகே எப்பநாடு, பிக்கபத்திமந்து மலைச்சரிவுகளில், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள இடமானது கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக் காடாக உள்ளது. இந்த பகுதியில் குறிஞ்சி மலர்களை காண, சிலர் அத்துமீறி நுழைவதாக வனத்துறைக்கு புகார்கள் சென்றுள்ளன. இது தொடர்பாக கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் நம்மிடம் பேசுகையில், “நீலக்குறிஞ்சி பூத்துள்ள இடம் காப்புக் காடாகும். குறிஞ்சி மலரை பார்க்க உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இவர்களை அழைத்து வருபவர்களுக்கும், காப்புக் காட்டில் அத்துமீறி நுழைபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE