மிலாடி நபியை முன்னிட்டு வண்டலூர், கிண்டி பூங்காக்கள் நாளை திறந்திருக்கும்: வனத்துறை

By ச.கார்த்திகேயன்

சென்னை: மிலாடி நபி தினத்தையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை நாளை (செப்.17) திறந்திருக்கும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே மிகப்பெரிய, பழமையான உயிரியல் பூங்காவாகும். இங்கு 44 பாலூட்டி இனங்கள், 88 பறவை இனங்கள், 38 ஊர்வன இனங்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப் படுகின்றன. சென்னை, புறநகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது.

தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் மேலும் அதிகமாக வருவது வழக்கம். ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் பூங்காவுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்.

நாளை (செப்.17, செவ்வாய்க்கிழமை) மிலாடி நபி திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, அவர்களின் வசதிக்காக நாளை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கிண்டி சிறுவர் பூங்காவுக்கு செவ்வாய்க் கிழமைகளில் விடுமுறை விடப்படும் நிலையில், அப்பூங்காவும் நாளை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE