சலீவன் பூங்கா to எல்க் அருவி: சுற்றுலா மண்டலம் ஆகுமா கோத்தகிரி திம்பட்டி பள்ளத்தாக்கு?

By ஆர்.டி.சிவசங்கர்


கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்த கிரி ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. கோத்தகிரியில் உள்ள தட்பவெட்ப நிலையும் சுவிட்சர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

உலக சுற்றுலா வரைபடத்தில் நீலகிரி மாவட்டம் இடம்பெற காரணமாக இருந்தவர் அப்போதைய ஆட்சியர் ஜான் சலீவன் ஆவார். இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும், அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாலும் இங்கு வாழ்ந்த மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர்.

இந்தப் பகுதியின் இயற்கை சுற்றுச்சூழல் ஜான் சலீவனை கவர்ந்ததால் திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கன்னேரிமுக்கு என்ற இடத்தில் முகாம் அலுவலகத்தை அமைத்தார். இதுவே நீலகிரியின் முதல் அரசு அலுவலகம் ஆகும்.

கோத்தகிரியில் உள்ள சலீவன் சுற்றுச்சூழல் பூங்கா இவரது நினைவாக அர்ப்பணிக்கப் பட்டுள் ளது. உதகைக்கு போட்டியாக சுற்றுலா தலமாக மாறிவரும் கோத்தகிரியில் உள்ள திம்பட்டி பள்ளத்தாக்கு முழுவதையும் சிறப்பு சுற்றுலா மண்டலமாக மேம்படுத்த வேண்டும் என நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, ‘‘கன்னேரிமுக்கு-கூக்கல் தொரை சாலையின் பரபரப்பான பாதை பள்ளத்தாக்கைப் பிரிக்கிறது. இந்த சாலை உதகையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பழங்கால கிராமங்கள் மற்றும் கலாச்சார அடையாளங் களால் நிறைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு பெரகணியின் நுழைவு வாயிலாகும். இது படுகர் சமூக மக்களின் புனிதமான இடமாகும். ஆண்டுதோறும் நடைபெறும் முன்னோர் வழிபாட்டுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சலீவன் பூங்கா .

கப்புச்சின் பிரைரி மற்றும் தத்துவக் கல்லூரி, பழமையான ஐரோப்பிய கல்லறை, ஜான் சலீவன் நினைவுச்சின்னம், நீலகிரி ஆவண மையம் ஆகியவை பள்ளத்தாக்கில் உள்ள சில வரலாற்று அடையாளங்களாகும். இங்குள்ள காளி யம்மன் கோயில், ராமகிருஷ்ணா கோயில், சந்தான வேணுகோபால் கோயில் ஆகியவை பழமையான கோயில்களாகும். உயிலட்டியில் உள்ள எல்க் நீர்வீழ்ச்சி ஆங்கிலேயர் காலத்திலிருந்தே ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்தது.

10 கிலோமீட்டருக்கு மேல் உள்ள திம்பட்டி பள்ளத்தாக்கு காய்கறி மற்றும் பழ சாகுபடியில் நிறைந்துள்ள ஆரஞ்சு அல்லது கூக்கால் பள்ளத்தாக்குடன் இணைகிறது. ஏராளமான ஓய்வு விடுதிகளை ஈர்த்துள்ள பள்ளத்தாக்கு வழியாக ஒரு பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். முன்மொழிவை ஆய்வு செய்ய நிர்வாகம் ஒரு பணிக்குழுவை அமைக்க வேண்டும், என்றார்.

சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதா வது: கோத்தகிரி பகுதியில் கோடநாடு காட்சிமுனை, கேத்ரீன் நீர்வீழ்ச்சி மற்றும் நேருபூங்கா போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. கோத்தகிரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், கூக்கல்தொரை சாலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளியூர் பார்வையாளர்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த நீர்வீழ்ச்சி, சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற வில்லை. இதே சாலையில் கன்னேரிமுக்கு பகுதியில், மாவட்டத்தின் முதல் ஆட்சியர் அலுவலகமான ஜான் சலீவன் நினைவிடம் உள்ளது. இதன் அருகிலேயே உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சிறந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தி, சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்ய வேண்டும். இதனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE