இரண்டாவது சீசனுக்காக பொலிவு பெறும் குன்னூர் சிம்ஸ் பூங்கா!

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு பூங்காவை பொலிவுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரின் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இந்த பூங்கா குன்னூர் - கோத்தகிரி சாலையில் அமைந்துள்ளது. பூங்காவில் அழகிய மலர்கள் மட்டுமின்றி ருத்ராட்சை மரம், காகித மரம், யானை கால்மரம் போன்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இவற்றை எல்லாம் கண்டு ரசித்துச் செல்வர். இந்த நிலையில், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கும் 2-வது சீசனையொட்டி சிம்ஸ் பூங்காவில் புதிய மலர் நாற்றுகளை நட்டு ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். குறிப்பாக, நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் தண்ணீர் பாய்ச்சியும், செடிகளால் பல்வேறு வனவிலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், புல் தரைகள் சமன்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக குன்னூருக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.இருந்தபோதிலும் இரண்டாம் கட்ட சீசனுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என தோட்டக்கலை துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE