தனுஷ்கோடி, அரியமான் கடற்கரைகளில் ஜெல்லி மீன்களால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து: கடலில் குளிக்க தடை விதிக்க வலியுறுத்தல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தனுஷ்கோடி, அரியமான் கடற்பகுதியில் ஜெல்லி மீன்களால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து உள்ளதால், கடலில் குளிக்க தடை விதித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஆகிய 2 இடங்களும் கடற்கரை சுற்றுலாவில் இந்திய அளவில் பெயர் பெற்று விளங்குகின்றன. இங்குள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமேசுவரம், பாம்பன், அரியமான், குருசடைத்தீவு, காரங்காடு கடற்கரை பகுதிகளை ரசிக்க ஆண்டுதோறும் 4 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, கடற்கரை சுற்றுலாவரும் பயணிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அரியமான் ஆகிய கடற்கரையில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இங்கு குளிப்பவர்களை ஜெல்லி மீன்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

இதுகுறித்து மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது: ஜெல்லி மீன்கள் முதுகெலும்பற்ற குழியுடலிகள் ஆகும். இவை 90 சதவீதம் நீரால் ஆனவை. இவைகளுக்கு மூளை, ரத்தம், எலும்பு, இதயம் கிடையாது.

24 கண்கள்... உடலில் காணப்படும் நரம்பு முடிச்சுகளைக் கொண்டு, சுற்றுப்புற மாற்றத்தை உணர்கின்றன. சில ஜெல்லி மீன்களுக்கு 24 கண்கள் உண்டு. இவற்றைக் கொண்டு நீந்தும் வழியில் உள்ளவற்றை அவற்றால் அறிய முடியும்.

மிதவை உயிரிகள், மீன் முட்டைகள், சிறிய மீன்கள் மற்றும் இறால்கள் ஜெல்லி மீன்களின் விருப்ப உணவுகளாகும். ஓரிரு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை ஜெல்லி மீன்கள் உயிர் வாழும்.

தமிழக கடற்கரையோரங்களில் 14 வகையான சைபோசோவன் ஜெல்லி மீன்களும்,2 வகையான கியூபோசோவன் ஜெல்லி மீன்களும் காணப்படுகின்றன. ஜெல்லி மீன்கள் கொட்டும் தன்மையுடையவை. ஜெல்லி மீன்கள் கரையில் இறந்து கிடந்தாலும், அதில் உள்ள கொட்டும் செல்கள் உயிர்ப்புடன் இருக்கும். எனவே, கடற்கரையில் ஒதுங்கிய ஜெல்லி மீன்களை வெறும் கையால் தொடக்கூடாது.

கடலில் காணப்படும் ஜெல்லி மீன் கொட்டினால் எரிச்சலும், வலியும் உண்டாகும். அப்போது, வினிகரை ஜெல்லி மீன் கொட்டிய இடத்தில் ஊற்றினால் எரிச்சல், வலி குறையும். அரைமணி நேரத்துக்கும் மேலாக வலி, எரிச்சல், தடிப்பு தொடர்ந்தாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ மருத்துவரை நாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமநாதபுரம் மீனவர்கள் கூறும்போது, "தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அரியமான் கடற்பகுதியில்ஜெல்லி மீன் குறித்த அறிவிப்புப்பலகைகளை அதிகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், காவல் துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், இந்த கடற்கரைப்பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE