ஆக.16 முதல் 19 வரை குற்றாலம் சாரல் விழா: சிறப்புகள் என்னென்ன?

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் சீஸன் காலத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் சாரல் விழா நடத்தப்படும். கடந்த ஆண்டு சாரல் விழா 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக சாரல் விழா நடத்தப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ஆகாஷ் முயற்சியால் குற்றாலத்தில் சாரல் விழா 8 நாட்கள் கோலாகலமாக நடத்தப்பட்டது.

சாரல் விழாவுடன் உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு சாரல் விழா நடத்தப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 19-ம் தேதி வரை 4 நாட்கள் சாரல் விழா நடைபெறுகிறது. இதையொட்டி குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 16-ம் தேதி காலை 10 மணியளவில் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சிறப்புகள் என்ன? - கொழு கொழு குழந்தைகள் போட்டி, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.17-ம் தேதி வாலிபால் போட்டி, படகு போட்டி, நாய்கள் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், 18-ம் தேதி பளுதூக்குதல், ஆணழகன் போட்டிகள், கோலப் போட்டி, யோகா நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள், 19-ம் தேதி நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறுதானிய உணவு போட்டி, மாற்றுத் திறனாளி மாணவர்களின் நிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகின்றன.

மேலும், 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஐந்தருவி அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 17-ம் தேதி ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு, 18-ம் தேதி வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE