சுத்தமின்றி மூச்சுத் திணறும் ‘டால்பின் நோஸ்’ - குன்னூரில் சுற்றுலா பயணிகள் அவதி

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டுகளித்து வருகின்றனர். குறிப்பாக குன்னூரை அடுத்த காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் உட்பட பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அதே நேரத்தில் குன்னூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்கு காட்சிகள் மற்றும் அருவிகள் அதிக அளவில் காணப்படும் டால்பின் நோஸ் சுற்றுலா மையம் சிறப்பு வாய்ந்தது. இது, வனத்துறை மற்றும் பர்லியாறு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, முறையான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தாததால், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதேபோல்,அங்குள்ள குப்பை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அப்பகுதியில் கடைகள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நுழைவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள்அதிகம் வசூலிக்கப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி மற்றும் வனத்துறையினர் செய்து தர வேண்டுமென, சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பராமரிப்பின்றி காணப்படும் கழிப்பிடங்கள்.

காட்சிமுனை வளாகத்திலுள்ள டான்டீ கடை, சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பர்லியாறு ஊராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை. குறிப்பாக, டால்பின் நோஸ் மையத்தில் குப்பையை அகற்றகூட நடவடிக்கை எடுக்கவில்லை. இங்குள்ள ஒரு கழிப்பிடமும் சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசுவதால், சுற்றுலா பயணிகளை முகத்தை சுளிக்க வைக்கிறது. சாலையும் ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.

டால்பின் நோஸ் காட்சிமுனை வரை உள்ள அதிகளவிலான ஆக்கிரமிப்பால், வாகனங்கள் செல்ல முடிவதில்லை. சமீபத்தில் இங்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது உள்ளே செல்ல சிரமப்பட்டனர். கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து, அப்போது போலீஸார், ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். இப்போது, மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

இங்குள்ள 8 ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில், ஏழை, எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு என இல்லாமல், ஆளும் கட்சி ஆதரவாளர்கள் கடைகள் அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் வரை புகார் சென்றும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

சாலையில் வாகனங்கள் நிறுத்த, தனியாருக்கு டெண்டர் விட்டு இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.30, வேன் மற்றும் மேக்சி கேப்களுக்கு ரூ.50 என பர்லியாறு ஊராட்சி சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், முறையே ரூ.30, 70, 100 என விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் உத்தரவால், இங்கு வைக்கப்பட்டிருந்த கூடுதல்கட்டண அறிவிப்பு பலகை அகற்றப்பட்டும், மீண்டும் கட்டண கொள்ளை அதிகரித்துள்ளது.

வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமித்துள்ள கடைகள்.

இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள்கூறும்போது, ''ஒரு காரில் குடும்பத்துடன் இங்கு வந்தபோது ரூ.100 வசூல்செய்தனர். ஆனால், டிக்கெட்டில் 3 கார்களுக்கு ரூ.100 என அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டால் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் கட்டண வசூல் மட்டுமே இங்கு குறிக்கோளாக உள்ளது''என்றனர்.

ஊராட்சி தலைவி சுசீலாவிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்காக வந்து கேட்டனர். இதற்காகபுதிய கடைகள் அமைத்துள்ளனர். ஜூலை மாதம் 12 கடைகளுக்கு ஏலம் விடப்படும். ஏற்கெனவே ஊராட்சிசார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE