உதகை ஏரியை நவீன தொழில்நுட்பத்தில் தூய்மைப்படுத்த பாபா அணுசக்தி மையத்தினர் ஆய்வு

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகை ஏரியில் உள்ள தண்ணீரை நவீன தொழில்நுட்பம் மூலம் தூய்மைப்படுத்துவது குறித்து பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். சீசன் காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு ஆகிறது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவுக்கு அடுத்ததாக படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த படகு இல்ல ஏரியில் உதகை நகரின் கழிவு நீர் முழுவதுமாக கலப்பதால் ஏரி தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் படகு சவாரி செய்யும் போது தண்ணீரை பீய்ச்சி அடித்து விளையாடும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். மேலும், படகு சவாரி செய்யும்போது துர்நாற்றமும் வீசுகிறது. இதற்கிடையே ஏரியில் மண் நிரம்பி ஆழம் குறைந்துள்ளதால் படகு சவாரி செய்ய முடியாத நிலையும் உள்ளது.

எனவே, படகு இல்ல குளத்தின் முகதுவாரத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மழை காலங்களில் கழிவு நீர் நேரடியாக படகு இல்ல ஏரிக்கு அனுப்பப்படுகிறது. இதைத்தொடர்ந்து உதகை படகு இல்ல ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தவும், அதில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து தூய்மைப்படுத்த வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ஆய்வு: உதகை ஏரியை தூர்வார வேண்டுமென 25 ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை இருந்து வரும் நிலையில் தற்போதைய தமிழக அரசு படகு இல்ல ஏரி தண்ணீரை நவீன தொழில் நுட்பம் மூலம் தூய்மைப்படுத்தவும், ஏரியை ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா மற்றும் தமிழக நீர்வள துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இன்று (ஜூலை 10) படகு இல்லத்தில் ஆய்வு செய்தனர்.

இது குறித்து விஞ்ஞானி டேனியல் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், “சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் தற்போது நேரில் ஆய்வு செய்யப்பட்டது. படகு இல்ல ஏரிக்கு தண்ணீர் வரும் வழிகள் தண்ணீர் வெளியேறும் வழிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஏரியில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பாசி படர்ந்துள்ளது. முதல் கட்டமாக படகு இல்லத்தில் உள்ள தண்ணீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தண்ணீரில் உள்ள மாசு தன்மையைப் பொறுத்து அதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏரியில் உள்ள தண்ணீர் தூய்மைப்படுத்தப்படும்” என்றார்.இந்த ஆய்வின்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஜனார்த்தனன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள் அழகன், உதவி செயற்பொறியாளர் அருள் பிரகாஷ், உதவி பொறியாளர் திவ்யா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, உதகை நகராட்சி சுகாதார அலுவலர் சிபி, படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ் உட்பட பலர் ஆய்வுக் குழுவினருடன் உடன் வந்திருந்தனர்.

25 ஆண்டுகளுக்குப் பின்.... - உதகை ஏரியில் நிரம்பியுள்ள மண்ணை ராட்சத இயந்திரங்கள் மூலம் வெளியேற்றி ஏரியை ஆழப்படுத்த தமிழக அரசு ரூ.7.50 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் முடிந்துவிட்டது. இதனை அடுத்து இன்னும் 15 நாட்களில் படகு இல்ல ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது என நீர்வள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமலும் சுத்திகரிக்கப்படாத நகராட்சி கழிவு நீரில் செயல்பட்டு வரும் உதகை படகு இல்ல ஏரியை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதற்கு சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE