குற்றாலத்தில் சாரல் களைகட்டியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

By செய்திப்பிரிவு

தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணைப் பகுதியில் 22 மி.மீ., தென்காசியில் 9, கருப்பாநதி அணையில் 5, குண்டாறு அணையில் 4 , கடனாநதி அணை, செங்கோட்டையில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

சாரல் மழை தீவிரமடைந்துள்ள தால், குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. பிரதான அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் நேற்று குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவுகளின்படி ஊத்து பகுதியில் 90 மி.மீ.,காக்காச்சியில் 66, மாஞ்சோலையில் 17, கொடுமுடியாறு அணையில் 16, பாபநாசத்தில் 14, சேர்வலாறில் 7 , ராதாபுரத்தில் 4, மணிமுத்தாறில் 1.60 மி.மீ. மழை பதிவா னது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 4,002 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 405 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து, 81.20 அடியாயானது. இதேபோல, சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, 101.64 அடியானது. மணிமுத்தாறு அணைக்கு 420 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE