குற்றாலத்தில் அபாய காலங்களில் அருவிக் கரையில் இருந்து மக்களை வெளியேற்ற ஒலி எழுப்பும் கருவி அமைப்பு

By அ.அருள்தாசன்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்படும்போது முன்னெச்சரிக்கையாக பொதுமக்களை அருவிகரைப் பகுதியில் இருந்து வெளியேற்ற அபாய சங்கு ஒலி எழுப்பும் கருவி பொருத்தும் பணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 17-ம் தேதி பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, வெள்ளம் ஏற்படும்போது அருவிக் கரையிலிருந்து பொதுமக்களை உடனடியாக வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிப் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுக்கு பின்னரே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பாக அருவிக் கரைகளில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் வன ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து செண்பகாதேவி அருவிப்பகுதி, பழைய குற்றாலம் மலைக்கு மேல், ஐந்தருவி மலைக்கு மேல் உள்ள பகுதிகளில் வனத்துறையினர், தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது உடனடியாக தகவல் தெரிவிப்பதற்காக தற்போது பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், பிரதான அருவி, ஐந்தருவி பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் நேரத்தில் பொதுமக்களை அருவிக் கரையிலிருந்து வெளியேற்ற அபாய சங்கொலி எழுப்பும் கருவி அமைக்கும் பணி போரூராட்சி நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE