கேரளாவில் கனமழை எதிரொலி: தேனிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

By என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: கேரளாவில் முன்னதாகவே தொடங்கிய பருவமழை மற்றும் அடிக்கடி அறிவிக்கப்படும் கனமழை எச்சரிக்கைகளால் அங்கு சுற்றுலா தலங்கள் முடங்கின. இதனால் அங்கிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தேனிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இருப்பினும் இரு மாநிலங்களிலும் வெவ்வேறு தட்பவெப்பநிலை நிலவி வருவதுடன் நிலவியல் ரீதியாகவும், மாறுபாடான தன்மையைக் கொண்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தின் மூணாறு, தேக்கடி, வாகமன் உள்ளிட்ட பகுதிகளைப் பொறுத்தளவில் பசுமைப் பள்ளத்தாக்குகள், மூடுபனி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், அருவிகள், ஆகியவற்றுடன் சில்லென்ற பருவநிலையும் உள்ளது. இதனால் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால், ஆண்டு முழுவதும் அங்கேயே இருக்கும் கேரளமக்களுக்கு அது பெரியளவில் சுற்றுலா தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. அவர்களைப் பொறுத்தளவில் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் சுற்றுலாதலங்கள் அவர்களுக்கு மாறுபாடான சூழ்நிலையாக உள்ளது.

குறிப்பாக தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கண்ணுக் கெட்டியதூரம் வரை விளைந்து கிடக்கும் பல்வேறு வகையான பூக்கள், நெல் வயல்வெளிகள், திராட்சை தோட்டங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் அங்கிருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. அடிக்கடி கனமழை எச்சரிக்கைகளும் அறிவிக்கப்படுகின்றன. இதனால் அங்கு சுற்றுலா தலங்கள் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளன. சில வாரங்களிலே கோடை விடுமுறையும் முடிய உள்ளதால் சுற்றுலா பயணிகள் பலரும் தற்போது தேனி மாவட்டத்துக்கு அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் திராட்சை தோட்ட சுற்றுலா மையம், சுருளி அருவி, வைகைஅணை உள்ளிட்ட பகுதிகள் கேரள சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “ஆண்டு முழுவதும் ஒரு சூழ்நிலையில் இருந்து விட்டு மாறுபாடான தன்மையை ரசிப்பதால் உற்சாகம் ஏற்படுகிறது. திராட்சை தோட்டங்களை ரசித்ததுடன் திராட்சைகளையும் விலைக்கும் வாங்கி இருக்கிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE