மலர் சிற்பங்களில் வாடிய மலர்களை அகற்றி புதுப்பிப்பு: ஏற்காடு சுற்றுலா பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

By எஸ்.விஜயகுமார்

சேலம்: ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள மலர்ச் சிற்பங்கள், புதிய மலர்களால் புதுப்பிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கின்றன. இவை, கோடை விழா நிறைவுக்குப் பின்னர் ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை சிறப்பாக நடத்தப்பட்டு, முடிவடைந்தது. கோடை காலம் தொடரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, அண்ணா பூங்கா மலர்க்காட்சி மட்டும் தொடர்ந்து, வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏற்காடு அண்ணா பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு, பிரம்மாண்ட காற்றாலை, பவளப் பாறைகள், நண்டு, சிப்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை, கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் உள்ளிட்டவை மலர் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

மலர்க்காட்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டதால், மலர்ச்சிற்பங்களில் உள்ள மலர்கள் ஆங்காங்கே வாடிய நிலையில் இருந்தன. இதனால், மலர்ச்சிற்பங்களின் அழகு சற்று குறைந்த நிலையில், தற்போது மலர்ச்சிற்பங்கள் யாவும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தோட்டக்கலைத் துறையினர் புதிய பூக்களை வரவழைத்து, மலர்ச்சிற்பங்களில் இருந்த வாடிய பூக்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய மலர்களை வைத்து அழகுபடுத்தியுள்ளனர்.

இதனால், ஏற்காடு மலர்க்காட்சி தற்போது மேலும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இது பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், ஏற்காடு அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மீன் வடிவமும் சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கோடை விழா முடிவடைந்து நிலையிலும், விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஏற்காடு வருகின்றனர். அவர்களுக்கு, ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மலர்ச்சிற்பங்கள், கோடை விழாவுக்கு வந்தது போல இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE