தொடரும் மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் உதகை பூங்கா: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகையில் கொட்டித் தீர்க்கும் கோடை மழையால் தாவரவியல் பூங்காவின் புல்தரைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. மலர் கண்காட்சி நிறைவடைந்தும் கண்காட்சிக்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக மழையே பெய்யாத நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வெப்பம் நிலவியது. சுமார் 29 டிகிரி வரை வெப்பம் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக உதகை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை கொட்டி தீர்க்கிறது.

இதனால் உதகையில் குளுமையான சூழல் நிலவியது. உதகை மலர் கண்காட்சிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழை பெய்த போது மரங்கள் மற்றும் மேடையின் நடுவே நின்று மழையிலிருந்து தற்காத்துக் கொண்டனர். பலர் குடைகளை வாங்கி, மழையிலேயே மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்நிலையில், மலர் கண்காட்சியைக் காண வந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம், மழையின் காரணமாக புல்தரையில் அதிகளவில் நடமாடியதால் , பூங்காவில் உள்ள புல்தரைகள் சேதமடைந்துள்ளன. கோடை மழை கொட்டித் தீர்த்ததால், புல்தரைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. மேலும், மலர் கண்காட்சிக்கான சிறப்பு அலங்காரங்களும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், ரோஜா கண்காட்சி நேற்று (மே 19) நிறைவடைந்தது. கண்காட்சி நிறைவு பெற்ற நிலையிலும், இன்றும் (மே 20) உதகை ரோஜா பூங்காவில் கண்காட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் குறித்து கேட்டபோது, கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கண்காட்சி நீட்டிக்கப்படவில்லை எனக் கூறினர்.

கண்காடசி நீட்டிக்கப்படாத நிலையில், எதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என சுற்றுலா பயணிகள் குழப்பமடைந்தனர். ஆனால், இதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. கண்காட்சிக்களுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிருப்தி நிலவிய நிலையில், மலர் கண்காட்சிக்கு மட்டும் பெரியவர்களுக்கு ரூ.25 குறைக்கப்பட்டது. இருப்பினும், கண்காட்சி முடிந்த பிறகும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE