கொடைக்கானலில் பிளம்ஸ் சீசன் தொடக்கம்: மழை காரணமாக விலை சரிவு

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளம்ஸ் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் மழை காரணமாக விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் பெரும் பள்ளம், மேல்பள்ளம், பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, பேத்துப்பாறை, வட கவுஞ்சி ஆகிய மலைப் பகுதிகளில் பரவலாக பிளம்ஸ் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 2 முறைவிளைச்சல் கிடைக்கும். தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பிளம்ஸ் விளைச்சல் அதிகமாக இருக்கும். தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக உள்ளது.

இங்கு விளையும் பிளம்ஸ் பழங்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற் போது 1 கிலோ பிளம்ஸ் ரூ.200-க்குவிற்பனை செய்யப்படுகிறது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பிளம்ஸ் பழங்களை அதிக அளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: இந்த ஆண்டு பிளம்ஸ் நல்ல விளைச்சல் உள்ளது. மழைக்கு முன்பு எங்களிடம் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.200-க்கு கொள்முதல் செய்து, வெளிச் சந்தையில் ரூ.250 வரை விற்பனை செய்தனர். கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் விற்பனை மந்தமாகியுள்ளது. அதனால் தற்போது ஒரு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்து, வியாபாரிகள் ரூ.200 வரை விற்கின்றனர். எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகமாக இருந்தாலும் மழை காரணமாக விலை குறைந்துள்ளது கவலை அளிக்கிறது, என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE