வைகை அணை தரைப்பாலத்தை மூழ்கடித்த தண்ணீர் - சுற்றுலா பயணிகள் கடந்து செல்ல தடை

By செய்திப்பிரிவு

ஆண்டிபட்டி / மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்துக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பூங்கா தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்வதால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியை கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பாசன நீர் மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது. அணையின் நீர் வெளியேற்றப் பகுதியில் இரு புறமும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இடது கரை பூங்காவில் பல்வேறு சிலைகள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும், வலது கரையில் உயிரியல் பூங்கா, இசை நீரூற்று உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு பகுதிகளையும் தரைப்பாலம் இணைக்கிறது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்துக்காக அணையிலிருந்து விநாடிக்கு 2,072 கன அடி நீர்திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் பாலத்தை மூழ்கடித்துச் செல்வதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடந்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. இது குறித்து நீர்வளத் துறையினர் கூறுகையில், இப்பாலத்தை உயர்த்தி சீரமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்றனர்.

மதுரையில் எச்சரிக்கை: தற்போது அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் ஆற்றில் குதித்து குளிக்கின்றனர். வைகை ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஆங்காங்கே மேடு, பள்ளமாக காணப்படுகிறது. இதனால் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் பள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதனால், வைகை ஆற்றின் கரையோரங்களில் ரோந்து சென்ற போலீஸார், சிறுவர் களையும், இளைஞர்களையும் எச்சரித்து அனுப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE