கோடை மழையால் குளிர்ந்த கொடைக்கானல் - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: கோடை மழை கொடைக்கானல் மலையை குளிர்வித்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியையும் வெயிலின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. கடந்த வாரம் வரை கொடைக்கானலில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சமதளப் பகுதியில் இருப்பது போன்று அதிக வெப்பநிலை நிலவியது. காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் இதமான தட்பவெப்பநிலை நிலவியது. மேலும், ஆங்காங்கே காட்டுத்தீயும் பற்றி எரிந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடைமழை பெய்து வருகிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு இதமான தட்பவெப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காலை முதல் இரவு வரை குளிர்ந்த காற்றுடன் ரம்மியான காலநிலை நிலவி வருகிறது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. வார விடுமுறை என்பதால், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

கடந்த திங்கள்கிழமை முதல் கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. வாகனங்களுக்கு இ-பாஸ் பெற எளிமையான முறையும் மாவட்ட நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் தங்கு தடையின்றி கொடைக்கானல் வந்து செல்கின்றனர்.

இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துவிட்டதாகவும், வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானதாகவும் கருதிய வியாபாரிகள், கடந்த 2 நாட்களாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை பார்த்துவிட்டு நிம்மதியடைந்தனர். பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சிறுவர்கள் குதிரைச் சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் ஓட்டியும் மகிழ்ந்தனர்.

குணா குகை, தூண்பாறை, பைன் பாரஸ்ட், மோயர் பாய்ன்ட் ஆகிய இடங்களிலும் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். வார இறுதி நாட்களில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் உள்ளூர் வியா பாரிகளுக்கு நம்பிக்கை பிறந் துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE