ஐஆர்சிடிசி சார்பில் கோவை - ஹைதராபாத் விமான சுற்றுலாவுக்கு முன்பதிவு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத் சிறப்பு விமான சுற்றுலா மற்றும் நேபாள ரயில் சுற்றுலா செல்ல ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்தியன்ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐஆர்சிடிசி ரயில் மட்டுமல்லாது விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கோவையில் இருந்து ஹைதராபாத்துக்கு சிறப்பு விமான சுற்றுலா மே 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த சுற்றுலாவில் கோல்கொண்டா கோட்டை, சார்மினார், மெக்கா மஸ்ஜித், சாலர்ஜங் அருங்காட்சியகம், ஸ்ரீ ராமானுஜர் சிலை, ராமோஜி சினிமா நகரம் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்கள் சுற்றுலாவுக்கு ரூ.21,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விமான கட்டணம், ஏசி ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகனம் மூலம் சுற்றி பார்க்கும் வசதி, உணவு (காலை,இரவு) ஆகியவை அடங்கும்.

நேபாளத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்: நேபாளத்தில் சிறப்பு சுற்றுலாவில் முக்திநாத் கோயில், வாராஹி கோயில், பிந்துவாஷி கோயில், மகேஷ்வர் குகை, டேவிஸ் நீர்வீழ்ச்சி, மனகமன இந்திய கோயில், பசுபதிநாதர் கோயில், ஜல் நாராயண் கோயில் மற்றும் அயோத்தியாவுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

13 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா மே 6-ம் தேதி தொடங்குகிறது. ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி, திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக செல்லும் ரயில் எண் 22613 (ராமேசுவரம் அயோத்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்) பிரத்யேக 3 ஏசி ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும்.

சுற்றுலா கட்டணம் ஒருவருக்கு ரூ. Rs.57,600-ல் இருந்து தொடங்குகிறது. இதில் ஏசி ரயில் பயணக் கட்டணம், மூன்று வேளை சைவ உணவு, தங்கும் வசதி, பேருந்து கட்டணம் ஆகியவை அடங்கும். மொத்த இருக்கைகள் 70. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9003140655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE