மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் புதுப்பிப்பு - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

மதுரை: ரூ.6 கோடி செலவில், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிய தொடுதிரை, காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிய ஒலி-ஒளி காட்சி அரங்கம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட உள்ளன.

மதுரை தமுக்கம் அருகே அமைந்துள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் 1670-ல் ராணி மங்கம்மாவால் கட்டப்பட்டு, கோடை கால அரண்மனையாக பயன்படுத்தப்பட்டது. இக்கட்டிடம் நாயக்கர் ஆட்சிக்குப் பிறகு கர்நாடக நவாப்பின் வசமிருந்தது. பின்னர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வசம் சென்றது. ஆங்கிலேய நீதிபதிகளை அடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் இல்லமாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. மொத்தம் 13 ஏக்கர் பரப்புள்ள இந்த இடத்தை, தமிழக அரசு 1955-ம் ஆண்டு அகில இந்திய காந்தி நினைவு நிதி வசம் ஒப்படைத்தது.

இக்கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, வடக்குப் பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. மேலும், ஆராய்ச்சி யாளர்கள் விடுதி, திறந்த வெளிக் கலையரங்கம், மகாத்மா காந்தி வாழ்ந்து வந்த சேவா கிராம மாதிரி குடில் உள்ளிட்டவை கட்டப்பட்டன. அதன் பின், காந்தி நினைவு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, 14.4.1959-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. நாட்டிலேயே முதன் முதலில் காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது மதுரையில் தான்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த காந்தி நினைவு அருங்காட்சியகத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.8.2022 சுதந்திர தினத்தன்று ரூ.6 கோடியில் காந்தி நினைவு அருங்காட்சியகம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அதே ஆண்டில் அக்டோபர் 2-ம் தேதி பொதுப்பணித் துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, பழமையான கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்களை கொண்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் கு.ரா.நந்தா ராவ் கூறியதாவது: அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணியால், 2023 முதல் தற்காலிக கட்டிடத்தில் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. புதுப்பிக்கும் பணியுடன், சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்துகொள்ள தொடுதிரையும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ள ஒலி-ஒளி காட்சி அரங்கமும், நடு ஹாலில் அருங்காட்சியகத்தின் மொத்த தகவலையும் தெரிந்துகொள்ளும் வகையிலான அரங்கமும் புதிதாக அமைக்கப்பட உள்ளன. மேலும், தமிழக அரசு திறந்தவெளி அரங்கம், சாலை மற்றும் கழிப்பறையும் புதுப் பித்து தருவதாகக் கூறியுள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் சுதந்திர தினத்துக்குள் முடிக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE