ஏலகிரி: ஏலகிரி மலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள் மிட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவைக்கு ஏற்ற தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணத்தை விரைவாக முடித்து விட்டு மலையை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட ஏலகிரி மலையில் ஆண்டுதோறும் ஒரே சீதோஷ்ண நிலை உள்ளதால் இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கியதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
அதன்படி, இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் 3-வது வாரத்தில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை தினசரி அதிகரித்து வருகிறது. இருப்பினும், மலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஊர் திரும்பும் நிலை தொடர்கிறது.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ‘‘ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சென்றால் கூடுதல் செலவாகும் என்பதால் நிறைய பேர் ஏலகிரி மலைக்கு வருகின்றனர். ஆனால், இங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. சுற்றிபார்க்க படகு குழாம், சிறுவர் பூங்கா, கோயில்கள், வைல்டு தீம் பார்க் ஆகியவை மட்டுமே உள்ளன.
சுற்றுலா பயணிகளின் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பிரத்யேக பொழுது போக்கு அம்சங்கள் ஏலகிரி மலையில் இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏலகிரி மலையில் உள்ள படகு குழாம், சிறுவர் பூங்கா ஆகியவை கண்டுகளிக்க ஒவ்வொருவருக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், கட்ட ணத்துக்கு ஏற்ற பொழுதுபோக்கு அங்கு இல்லாததால் குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் ஏமாற்றமடைகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது தண்ணீர் பஞ்சம் ஏலகிரி மலையில் தலைவிரித்தாடுகிறது. தங்கும் இடங்களில் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என அறிவுறுத்து கின்றனர். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. உணவகங்களில் கூட தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. இதனால், சுற்றுலா பயணத்தை விரைவாக முடித்துக்கொண்டு மலையை விட்டு வெளியேறும் நிலைக்கு நாங்கள் தள்ளப் பட்டுள்ளோம்’’ என்றனர்.
இதுகுறித்து ஏலகிரி மலை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், ‘‘இந்து தமிழ் திசை’’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ஏலகிரி மலை ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு, 12,500 பேர் வசிக்கின்றனர். மலைவாழ் மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலி தொழில் ஆகியவற்றை செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் பீன்ஸ், கேரட், கீரை, வாழை,பலா, கேழ்வரகு, சிறுதானியங்கள், கீரை வகைகள் அதிகமாக பயிரிடப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுக்காததால் அனைத்து ஏரிகளும் வறண்டு காணப்படுகின்றன. ஏலகிரி மலையில் 10 ஏரிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக ஏரிகள் தூர்வாரப்படவில்லை. 23 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் கடந்த 2 மாதங்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது உண்மை தான்.
இருப்பினும், மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், சுற்றுலா பயணிகளுக்கு போது மான தண்ணீர் வசதியை பெருக்க நீர்மட்டம் உள்ள பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தினோம். அதில், நிலாவூர், புங்கனூர், அத் தனாவூர் உள்ளிட்ட 5 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளோம். இதற்கான நிதி ஆதாரம் ஊராட்சி யில் இல்லாததால் ஒன்றிய பொது நிதியை எதிர்பார்த்துள்ளோம்.
இது தொடர்பாக ஜோலார் பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைப்படி கடிதம் வழங்கியுள்ளோம். நிதி ஒதுக்கீடு ஆனவுடன் புதிதாக 7 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ஆயத்தமாகி வருகிறோம். புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பெற்றால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏலகிரி மலையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. இருப்பினும், தற்போது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு லோடு தண்ணீர் ரூ.200-க்கு வாங்கி ஒவ்வொரு பகுதியாக சுழற்சி முறையில் விநியோகம் செய்து வருகிறோம்.
அதேபோல, தங்கும் விடுதிகள், உணவகங்கள் அவரவர் தேவைக்கு ஏற்ப தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்து நீடிக்காமல் இருக்க வெகு விரைவில் தீர்வு காணப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
8 hours ago
சுற்றுலா
9 days ago
சுற்றுலா
17 days ago
சுற்றுலா
19 days ago
சுற்றுலா
21 days ago
சுற்றுலா
23 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago