அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் - சுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஏற்காடு

By செய்திப்பிரிவு

சேலம்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்றே விடுபட, சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்ததால் ஏற்காடு சுற்றுலாத் தலம் களைகட்டியது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டுக்கு வார விடுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வார விடுமுறை நாட்களில் ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட, தற்போது கூடுதல் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். ஞாயிறு விடுமுறை நாளான நேற்று, அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால், ஏற்காடு திருவிழா கோலத்தில் காணப்பட்டது.

அண்ணா பூங்கா, ஏரிப் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்காக்கள் உள்பட மலர்த் தோட்டங்களும் பசுமையான புல்வெளிகளும் நிறைந்த பூங்காக்களில் குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினர், புதுமணத் தம்பதிகள், நண்பர்கள் குழு என பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. இது போல, ஏரி படகுத்துறை, பகோடா பாயின்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், கரடியூர் வியூ பாயின்ட் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிகுந்திருந்தது.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறியது: ஆண்டு முழுவதும் வந்து செல்லக்கூடிய இடமாக ஏற்காடு சுற்றுலாத் தலம் உள்ளது. ஆனால் இங்கு பொழுதுபோக்கு சார்ந்த இடங்கள் குறைவாகவும், வழக்கமானவையாகவும் உள்ளன. எனவே, இவற்றை மேம்படுத்தி மாற்றங்களை கொண்டு வந்து, சுற்றுலாப் பயணிகளை அதிக எண்ணிக்கையில் ஈர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளின் ஆண்டு விடுமுறை தொடங்கியதுமே சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், ஏற்காடு உள்ளிட்ட இயற்கை சார்ந்த சுற்றுலாத் தலங்களில், ஆண்டு தோறும் புதுமையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால், வெளி மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து, சுற்றுலாவை மேம்படுத்த முடியும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE