குண்டும் குழியுமான சாலைகளால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமம்

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானலில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதால், கோடை சீசனுக்கு முன்பாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானல், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரை கொடைக்கானலில் கோடை சீசன் காலம்.

இந்தாண்டு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கொடைக் கானலில் குவிந்து வருகின்றனர். வரும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. அச்சமயம் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் பல மடங்கு அதிகம் இருக்கும். கோடை சீசன் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கொடைக் கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலைகள் மோசமாக சிதிலம் அடைந்துள்ளன. அவை சீரமைக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.

பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை, மூஞ்சிக்கல், ரோஜா தோட்டம், அப்சர்வேட்டரி செல்லும் சாலை மற்றும் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலைகளும் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளன. மோசமான சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வலி ஏற்படுகிறது. டூவீலரில் செல்வோர் தடுமாறி கீழே காயமடைகின்றனர்.

கோடை விடுமுறை மற்றும் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் போது சாலை அமைக்கும் பணி மேற்கொண்டால் வாகன போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, சுற்றுலா பயணிகளும் பாதிக்கும் நிலைமை உள்ளது. ஆகவே, கோடை சீசனுக்கு தொடங்கும் முன்பாக மோசமாக சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜனிடம் கேட்டபோது, ‘கோடை சீசனுக்கு முன்பாக குண்டும் குழியுமான சாலைகளில் பேட்ஜ் ஒர்க் செய்யப்பட உள்ளது. தேவைப்படும் இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும். போக்கு வரத்து நெரிசலை தடுக்க மாற்றுச் சாலைதிட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க சாலை ஓரங்களில் ‘ரோலர் கிரஸ்டர் பேரியர்’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான, சாத்திய கூறுகளை ஆராய்ந்து, திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE