ராமேசுவரத்தில் தொடங்கப்பட்ட 2-வது நாளிலேயே சிறப்பு சுற்றுலா பேருந்து சேவை நிறுத்தம்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சிறப்பு சுற்றுலாப் பேருந்துகள் திட்டம் தொடங்கப்பட்ட 2-வது நாளிலேயே இச்சேவை நிறுத்தப்பட்டுவிட்டதால் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந்தும் சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. ராமேசுவரத்தில் உள்ள ஆன்மிக, சுற்றுலாத் தலங்களுக்கு பக்தர்களும், சுற்றுலாப் பயணி களும் சிரமமின்றி செல்வதற்காக சுற்றுலா பேருந்து சேவையை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 6-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த சிறப்பு பேருந்துகள் சனி, ஞாயிற்றுக் கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் ராமேசுவரம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி சீதா தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், ராமர் தீர்த்தம், அக்னி தீர்த்தம், கலாம் இல்லம், ரயில் நிலையம், கலாம் நினைவிடம் ஆகிய வழித் தடங்களில் இயக்கப்படும். இதற்கு பயணக் கட்டணம் ரூ.80 செலுத்தி அந்த பயணச் சீட்டை பயன்படுத்தி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை எந்த நிறுத்தத்திலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த சுற்றுலாப் பேருந்து திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, ராமேசுவரம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் வாகன உரிமையாளர்கள்ள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் முதல் நாளான கடந்த சனிக்கிழமை 5 சுற்றுலா பேருந்துகளில் ஒரு பேருந்து மட்டும் இயக்கப்பட்டது. 2-வது நாளான நேற்று ( ஞாயிற்றுக் கிழமை ) அந்த ஒரு பேருந்து கூட இயக்கப்படவில்லை. 5 பேருந்துகளும் ராமேசுவரம் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ராமேசுவரம் ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் வாகன உரிமையாளர்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தை முடக்க போக்குவரத்து அதிகாரிகளுக்கு திமுகவினர் அழுத்தம் கொடுத்ததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து ராமேசுவரம் போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த சிறப்பு சுற்றுலாப் பேருந்துகள் சீதா தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், ராமர் தீர்த்தம், அக்னி தீர்த்தம், கலாம் இல்லம், ரயில் நிலையம், கலாம் நினைவிடம் ஆகிய வழித்தடங்களுடன் தனுஷ்கோடி, அரிச்சல் முனை, பாம்பன், விவேகானந்தர் நினைவிடம் ஆகிய வழித்தடங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டு திட்டவரைவு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும் சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE