வனத்துறையினரின் அனுமதி மறுப்பால் சோத்துப்பாறை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: தேனியிலிருந்து பெரியகுளம் வழியாக 25 கிமீ.தொலைவில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வராக நதியின் குறுக்கே இரண்டு மலைகளுக்கு குறுக்காக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு தேக்கப்படுகிறது.

உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட அணை என்ற சிறப்பும் இதற்கு உண்டு. 126.28 அடி உயரம் உள்ள அணையில் 100 மில்லியன் கன அடி நீரைத் தேக்க முடியும். 2001 நவ.21-ம் தேதி அணை திறக்கப்பட்டது. பெரியகுளம், தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது.

சோத்துப்பாறை அணையில் இருந்து வழிந்தோடும் நீர்.

இந்த அணை மூலம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் பட்டியலிடப்பட்டு உள்ளது. தொடக்கத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டன. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து மலைசார்ந்த இந்த அணையை ரசித்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவது கிடையாது.

தூரத்தில் இருந்தபடி சோத்துப்பாறை அணையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

இதனால், இப்பகுதி களையிழந்து கிடக்கிறது. சமூக வலைதளங்களில் அணையின் சிறப்புகளையும், மலைசார்ந்த ரம்மியமான பின்னணியையும் பார்த்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் உள்ளே நுழையக்கூட அனுமதி இல்லை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்நிலை தொடர்வதால் தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் சுற்றுலாத் தலம் என்ற தகுதியையும் வெகுவாய் இழந்து வருகிறது.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அணையின் வலது பக்கத்தில் சென்று ரசித்தோம். தற்போது அனைத்துப் பகுதிகளையும் மூடி வைத்துள்ளனர். இதனால் மதகுகள் வழியே நீர் வழிந்தோடுவதை மட்டும் தூரத்தில் நின்று பார்க்கும் நிலை உள்ளது.

சோத்துப்பாறை அணையில் பூட்டப்பட்டுள்ள நுழைவுப்பகுதி.

இருக்கைகள், பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், மலைப்பகுதிகளில் விளையும் பழ விற்பனையகம் போன்றவற்றையும் அமைத்தால் வருவாயும் அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகளுக்கும் உற்சாகமாக இருக்கும். முக்கியப் பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்று ரசிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும் என்றனர்.

வனத் துறையினர் கூறுகையில், இந்த அணை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அணையின் மதகுப் பகுதியில் சிலர் சறுக்கி விளையாடினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்று முதல் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்றனர்.

பயன்பாடின்றி துருப்பிடித்து கிடக்கும் நுழைவுக் கட்டண வசூல் மையம்.

ஆனால், மாவட்ட சுற்றுலாத் துறையோ சோத்துப்பாறை அணையை பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக முன்னிலைப்படுத்துகிறது. பல இடங்களிலும் இதுகுறித்த விவரங்களையும் காட்சிப்படுத்தி வருகிறது. இதை நம்பி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. எனவே, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இங்கு சிறப்புத் திட்டங்கள் மூலம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பெரியகுளம் பகுதி சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேனியைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்லும்
கி.மீ. தூரத்தைக் குறிப்பிட்ட சுற்றுலாத்துறை சார்பில்
வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை.
(இடம்: தேனி பென்னிகுவிக் பேருந்து நிலையம்)

சிறு வர்த்தகம் பாதிப்பு: சோத்துப்பாறை அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருந்த காலத்தில் இங்கு அதிகளவிலான சிறு வர்த்தகம் நடைபெற்றது. வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் உணவகங்கள், தேனீர் கடைகள், தின்பண்டங்கள் விற்பனையகம், வாடகை ஆட்டோ இயக்கம் என்று இப்பகுதி மக்களின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. தற்போது அணைக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் இந்த வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE