கொடைக்கானலில் ஆபத்து மிகுந்த அஞ்சுவீடு அருவி - தொடரும் உயிரிழப்புகள்

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆபத்து மிகுந்த அஞ்சுவீடு அருவியில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கிறது. இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க "மலையருவிகள் ரசிக்க மட்டுமே குளிப்பதற்கு அல்ல" என்பதை சுற்றுலாப் பயணிகளிடம் உணர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலைப் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன், மோயர்பாய்ன்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத் தாக்கு மற்றும் நகரின் மத்தியில் உள்ள பிரையன்ட் பூங்கா, ஏரி ஆகியவை தான் முக்கியச் சுற்றுலாத் தலங்களாக உள்ளன.

கொடைக்கானலின் இயற்கை எழிலை ரசிக்க அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகள், பார்த்த இடத்தையே திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கு பதிலாக புதிய இடங்களை தேடிச் செல்கின்றனர். அவற்றில் ஒன்று தான் வனப்பகுதி யில் உள்ள அஞ்சுவீடு அருவி. பேத்துப் பாறை அருகேயுள்ள இந்த அருவி பார்ப்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. ஆனால், ஆபத்து மிகுந்தது என்பதை அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் உணர்வதில்லை.

பாதுகாப்பு இல்லாத நிலையில் அங்கு செல்வதைத் தடுக்க யாரும் முன்வருவதில்லை. இதனால் ஆர்வ மிகுதியால் ஆழம் தெரியாமல் அருவிப் பகுதியில் உள்ள நீரில் இறங்கி குளிக்க முயலும் போது ஆழமான பகுதிகளுக்கு சென்று உயிரை இழக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த அருவியில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை இங்கு நீரில் மூழ்கி 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அருவியில் இருந்து தண்ணீர் விழும் இடத்தில் புதை மணல் போல் உள்ளது. இப்பகுதியில் குளிப்பவர்கள்தான் புதை மணலில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

புதிய சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு சுட்டிக்காட்ட சுற்றுலாத் துறை முன்வர வேண்டும். இதற்கு மலைக் கிராம சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும். கொடைக்கானல் மலைக் கிராமங்களில் உள்ள பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை காண வழிமுறைகளை சுற்றுலாத் துறை வகுத்துக் கொடுத்தால், சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை சரியான வழியில் கொண்டு செல்லலாம். ஆபத்து மிகுந்த இடங்களுக்கு செல்வதையும் தவிர்த்து விடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE