ஸ்டிரைக், சாரல் மழையால் தேக்கடி, மூணாறில் விடுதிகளிலேயே முடங்கிய சுற்றுலா பயணிகள்! 

By என்.கணேஷ்ராஜ்

குமுளி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், தொடர்மழை பெய்ததாலும் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

கேரள அரசு சார்பில் நில உச்சவரம்பு சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமதுகான் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பை காட்டும் வகையில் இடுக்கி மாவட்டம் முழுவதும் நேற்று முழுஅடைப்பு போராட்டத்தை கேரள அரசு அறிவித்தது. ஆளும்கட்சி போராட்டம் என்பதால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தேக்கடி, குமுளி, தொடுபுழா, தேவிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. அரசு, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. இருப்பினும் சபரிமலை சிறப்பு பேருந்துகள் மட்டும் இயங்கின. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டன.

மூணாறில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினால் மூடப்பட்டு கிடக்கும் மெயின் பஜார் கடைகள்.

மேலும் குமுளி, தேக்கடி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று பகல் முழுவதும் தொடர் சாரல் மழை பெய்தது. இதுபோன்ற காரணங்களினால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின. ஹோட்டல்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் பலரும் விடுதியிலே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு பிறகு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் இடுக்கி மாவட்டம் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE