நிரம்பி வழியும் மீனாட்சியம்மன் கோயில் பல்லடுக்கு வாகன காப்பகம் - சுற்றுலாப் பயணிகள் அவதி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விழா நாட்களில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் சிறிது நேரத்திலேயே நிரம்பிவிடுவதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்த முடியாமல் வீதிகளைச் சுற்றிச் சுற்றி வந்து மனம் நொந்து செல்லும் பரிதாபம் ஏற்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள், உள்நாட்டு, வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள், ஆண்டுதோறும் 2 கோடிக்கு மேல் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை, கோயில் நிர்வாகம், சுற்றுலாத் துறை, மாநகராட்சி ஆகியன தற்போது வரை முழுமையாகச் செய்து கொடுக்கவில்லை.

கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் போதுமான கழிப்பறை வசதியில்லை. அவசரத்துக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கழிப்பிடம் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், கடந்த காலங்களில் தங்கள் வாகனங்களை எல்லீஸ் நகரிலுள்ள மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம், வெளி வீதிகள், மாசி வீதிகள், ஆவணி வீதிகள், நேதாஜி சாலை, ஜான்சி ராணி பூங்கா.

பெரியார் பேருந்து நிலையப் பகுதிகளில் நிறுத்தி சென்றனர். தற்போது சாலைகளில் நிறுத்தினால் போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். வாகனங்களை நிறுத்துவதற்கு பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆவணி மூல வீதி ஆகிய இடங்களில் பல்லடுக்கு வாகன காப்பகம் (மல்டிலெவல் பார்க்கிங்) அமைக்கப்பட்டுள்ளது.

பெரியார் பேருந்து நிலைய பல்லடுக்கு வாகனக் காப்பகம் இன்னும் திறக்கப்படவில்லை. மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆவணி மூலவீதியில் மட்டும் தற்போது வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது. வடக்காவணி மூலவீதி பல்லடுக்கு வாகன காப்பகம் ரூ.42 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் பல்லடுக்கு வாகனக் காப்பகம்.

இந்தப் பல்லடுக்கு வாகனக் காப்பகத்தில் ஒரே நேரத்தில் 120 கார்கள், 1,400 இரு சக்கர வாகனங்களை நிறுத்த வசதி உள்ளது. தற்போது இந்தப் பல்லடுக்கு வாகனக் காப்பகத்தை எடுத்து நடத்துவதற்கு மாநகராட்சி ‘ஸ்பார்க் லென்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. அந்நிறுவனம் வாகன ஓட்டிகள் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பல்லடுக்கு வாகனக் காப்பகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதிகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில். இந்தப் பல்லடுக்கு வாகனக் காப்பகத்தில் போதுமான வாகனங்களை நிறுத்த முடியாமல் மீனாட்சிம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். விழா நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் பல்லடுக்கு வாகனக் காப்பகம் சிறிது நேரத்திலேயே நிரம்பிவிடுகிறது.

இது குறித்து கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வருவோர் கார்களில்தான் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலைத் தாண்டி வடக்காவணி மூல வீதியில் உள்ள வாகனக் காப்பகத்தைக் கண்டறிந்து வருவதற்குள் வழிநெடுகப் படாதபாடு படுகின்றனர்.

ஆனால், கோயிலுக்கு வாகனங்களில் வருவோரை கணக்கிடும்போது இந்த வாகனக் காப்பகம் போதுமானதாக இல்லை. சாதாரண நாட்களில் சிறிது நேரத்திலேயே வாகனக் காப்பகம் நிரம்பிவிடுகிறது. வாகனக்காப்பகம் நிரம்பியது தெரியாமல் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வரும் போது அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அதற்குப் பின் அவர்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவது எனத் தெரியாமல் சாலையோரங்களில் எங்காவது நிறுத்த முயன்றால் அப்பகுதியிலுள்ள கடைக்காரர்கள் விரட்டுகின்றனர்.

அதையும் மீறி நிறுத்தினால் காவல் துறையினர் ரூ.2 ஆயிரம் முதல் அபராதம் விதிக்கின்றனர். அதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல் குடும்பத்தோடு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கடைசி வரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய முடியாமல் மனம் நொந்து செல்கின்றனர்.

பெரியார் பேருந்துநிலைய பல்லடுக்கு வாகனக்காப்பகத்தைத் திறந்தால் ஓரளவு இந்த வாகனங்களை நிறுத்தும் பிரச்சினையைச் சமாளிக்கலாம் என மாநகராட்சி கூறுகிறது. ஆனால், பெரியார் பேருந்து நிலையத்தைச் சுற்றி வருவோர் மட்டுமே அங்கு வாகனங்களை நிறுத்த முடியும். கோயிலுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவிப்பது நிரந்தரமாகி விட்டது.

மேலும், கோயிலுக்கு புதிதாக வாகனங்களில் வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகனக் காப்பகங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்ற விவரம் தெரியாமல் தவிக்கின்றனர். ஒரு வழியாக விசாரித்து இடத்தைச் சென்றடைய படாதபாடுபடுகிறார்கள். முக்கியப் பிரமுகர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் வாகனங்கள் தனிப் பாதையில் செல்வதால் அவர்களுக்கு மக்கள் படும் சிரமங்கள் தெரிவதில்லை.

மீனாட்சியம்மன் கோயில், ஆன்மிகத் தலம் என்பதோடு மதுரை சுற்றுலாத் தலமாக இருப்பதால் இங்கு வாகனங்களில் வருவோருக்கு போதிய வாகனக்காப்பக வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் மதுரை நகரின் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் எங்கெங்கு வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது என்பதை அவர்கள் நகருக்குள் நுழையும் முன்னரே தனியாக இடங்களை அடையாளப் படுத்தி வழிகாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஏற்கெனவே, மீனாட்சியம்மன் கோயிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு வந்து செல்வதில் மிகுந்த சிரமப்படுகின்றனர். தற்போது வாகனக் காப்பகப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டதால் கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை எதிர் காலத்தில் குறையும் அபாயம் ஏற்படும்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெரியார் பேருந்து நிலைய பல்லடுக்கு வாகனக் காப்பகம் செயல்படத் தொடங்கினால், ஓரளவு வாக னங்கள் நிறுத்துமிடப் பிரச்சினை சரியாகிவிடும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

19 days ago

சுற்றுலா

20 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்