கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

By செய்திப்பிரிவு

உதகை: தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு ஏப்ரல்,மே மாதங்களில் முதல் சீசன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டாவது சீசன் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் உட்பட பண்டிகை தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

அதன்படி, உதகையின் முக்கிய சுற்றுலா தலமான அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதே போல், உதகை படகு இல்லம், உதகை - கூடலூர் சாலையிலுள்ள பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களிலும் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது.

உதகை மட்டுமின்றி குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி, முதுமலை உட்பட பல்வேறு இடங்களிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் காணப் பட்டனர். இதற்கிடையே, பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களில் வந்ததால், உதகை - மேட்டுப் பாளையம் சாலை, உதகை - கூடலூர் சாலை மற்றும் உதகை நகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக நகர்ந்தபடியே இருந்தன.

இது குறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ப.சுந்தர வடிவேல் கூறும் போது, ‘‘போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 200 போலீஸார் நியமிக்கப் பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை முடியும் வரை, இவர்கள் முழு வீச்சில் பணியாற்றுவார்கள். இதேபோல், ஹில்காப் எனப்படும் இருசக்கர வாகன ரோந்து படையினர் தீவிரமாக பணி புரிந்து வருகின்றனர். சீசன் நேரத்தில இருக்கும் நடைமுறை தற்போதும் கடைபிடிக்கப்படுவதால், வாகனங்கள் எப்போதும் நகர்ந்தபடியே இருக்கும்'’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE