பயணிகளால் ‘களைகட்டிய’ கொல்லிமலை: அருவிகளில் குளித்து மகிழ்ந்து உற்சாகம்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வருகையால் கொல்லிமலை களை கட்டியது. அருவிகளில் குளித்து பயணிகள் மகிழ்ந்தனர்.

நாமக்கல், சேலம் மாவட்ட எல்லையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் கொல்லிமலை உள்ளது. ஆண்டு முழுவதும் இதமான கால நிலையும், மூலிகை வளம் நிறைந்த மலை என்பதால் மாநிலத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, தங்கி இங்குள்ள இயற்கை எழிலை ரசித்து செல்கின்றனர்.

மேலும், மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளில் குடும்பத்தினருடன் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி அடையத் தவறுவது இல்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கொல்லிமலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேலும், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனிடையே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், கொல்லிமலைக்குக் கடந்த இரு நாட்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

பயணிகள் மலையின் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்ததுடன், அருவி களில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், இங்குள்ள சித்தர் குகை உள்ளிட்ட கட்டுக்கடங்காத வசீகரங்களைக் கண்டு ரசித்தனர். மலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவற்றையும் பயணிகள் அங்குள்ள சந்தை மற்றும் கடைகளில் கொள்முதல் செய்து கொண்டனர்.

இதுதொடர்பாக சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, “கொல்லிமலை ஆகாயகங்கை அருவியில் தண்ணீர் கணிசமான அளவு வருகிறது. இதனால், குழந்தைகளுடன் அச்சமின்றி குளித்து மகிழ்ந்தோம். அருவிக்கு 1,000 படிக்கட்டில் குழந்தைகளுடன் இறங்கியது புதிய அனுபவத்தையும், புத் துணர்வையும் ஏற்படுத்தியது” என்றனர்.

இதுதொடர்பாக கொல்லி மலை பகுதி வியாபாரிகள் கூறும்போது, “ஆண்டு முழுவதும் பயணிகள் வருகை இருந்தாலும், விடுமுறை நாட்களில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், இங்கு விளையும் நறுமணப் பொருட்கள் மற்றும் பழங்களைப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதால், இந்த வர்த்தகம் எங்களுக்குப் பெரிதும் கைகொடுத்து வருகிறது. வரும் நாட்களிலும் பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE