குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கூடுதல் பார்க்கிங் கட்டண வசூல்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர். கட்டண கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உதகை, குன்னூர், கோத்தகிரியிலுள்ள சுற்றுலா தலங்களை காண சுற்றுலா பயணிகள் அணிவகுக்கின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா தலங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தால், சுற்றுலா பயணிகள் விழிபிதுங்குகின்றனர். குறிப்பாக, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்கா பகுதியில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘பிரசித்தி பெற்ற குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் வாடகை கார், வேன் மற்றும் பேருந்து ஆகியவற்றில் வருவதால், அப்பகுதியிலுள்ள சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன. இதற்கு தனியார் சார்பில் டெண்டர் முறையில் பார்க்கிங் என சிலர் பணம் வசூலித்து வருகின்றனர்.

குன்னூர் நகராட்சி அறிவித்த கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக, உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலித்து வருகின்றனர். கார்களுக்கு ரூ.20 இருந்த நிலையில், தற்போது ரூ.50 வசூலிக்கப்படுகிறது. வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.50-ல் இருந்து தற்போது ரூ.100-ஆக வசூலிக்கப் படுகிறது.

மேலும், குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியிலுள்ள சாலை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த, தனியார் மூலமாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெடுஞ்சாலையில் பார்க்கிங் கட்டணத்தை தனியாரை வசூலிக்க அனுமதித்துள்ளது முரணாக உள்ளது. நகராட்சி கவுன்சிலர்கள் சிலர் சிண்டிகேட் அமைத்து வாகன பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய நகராட்சியிடமிருந்து அனுமதி பெற்று, சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பினால், குன்னூர் நகராட்சி அதிகாரிகள் பெயரளவில் சோதனை செய்வது போல காட்டிக் கொண்டு சென்று விடுகின்றனர். தினமும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சிம்ஸ் பூங்கா பகுதியில் நிகழும் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும்’’ என்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE