கொடைக்கானலை பதறவைக்கும் பைக்கர்கள்! - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சீசன் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் மட்டும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டிருந்த நிலைமாறி, தற்போது குளிர்காலம் உட்பட அனைத்து நாட்களிலுமே நெரிசல் அதிகரித்தே காணப்படுகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து இளைஞர்கள் பலர் அதிக இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளில் கும்பலாக சுற்றுலா வருகின்றனர். அவர்கள் மலைச் சாலையிலும், சுற்றுலா இடங்களிலும் அதிக சத்தத்துடன் அதிவேகமாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் பைக்குகளை ஓட்டுகின்றனர்.

இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிக்கடி சிறுசிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக்குகளை ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இவர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் சேவையில் தொடர்பு கொண்ட கொடைக்கானலைச் சேர்ந்த கார்த்திக்குமார் கூறியதாவது: கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் பைக்குகளில் வருகின்றனர். ஆனால் உற்சாக மிகுதியில் அவர்கள் சாலைகளில் அதிக சத்தத்துடனும், தாறுமாறாகவும் பைக்குகளை ஓட்டுகின்றனர்.

கொடைக்கானலுக்கு பைக்குகளில் சுற்றுலா வந்த இளைஞர்கள்.
படங்கள்: ஆ.நல்லசிவன்

இன்னும் சிலர் சாகச முயற்சியில் ஈடுபடுவதோடு, பந்தயம் வைத்தும் ஓட்டுகின்றனர். இவர்களால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அத்துமீறி செயல்படும் பைக்கர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினரிடம் கேட்டபோது, கொடைக்கானலுக்கு பைக்குகளில் சுற்றுலா வரும் இளைஞர்களை நிறுத்தி ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று போன்றவை சோதனை செய்யப்படுகிறது. மேலும் பைக்குகளில் அதிவேகமாக செல்வோருக்கு அபராதம் விதிப்பதோடு, பாதுகாப்பான பயணம், போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது என்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE