கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

By செய்திப்பிரிவு

உதகை: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை குளுகுளு காலநிலை நிலவும் உதகையில் கழிக்கவும், 2-வது சீசனை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால், நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக, தொடர் விடுமுறையிலும் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

கேரளா, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் மிகவும் குறைவாகவே வந்திருந்தனர். வார விடுமுறையான நேற்று உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. அங்கு பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்ததுடன், புல்வெளியில் அமர்ந்து குடும்பத்தினருடன் ஓய்வெடுத்தனர்.

இதேபோல உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம்உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. உதகை படகு இல்லத்தில் ஏராளமான படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.

இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறும்போது, "கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதாலும், தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து வருவதாலும், எதிர்பார்த்த சுற்றுலா பயணிகள் வருகை இல்லை" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE